Monday, March 23, 2009

உணர்ச்சி

நண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல்? நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவர் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.

உதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், “முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது” என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி

எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

No comments:

Post a Comment