Monday, June 29, 2009

சிந்தனைகள்

    • நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.    • சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.


    • சுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Thursday, June 25, 2009

எது அழகு

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

Tuesday, June 23, 2009

புகழ்


புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.

உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

Monday, June 22, 2009

முதல் நாளிலேயே ஞானோதயம்

தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!

Monday, June 8, 2009

மூடநம்பிக்கை

‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.

இராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.

“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்"

Tuesday, June 2, 2009

எண்ணியதை அடைதல்

கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்.