Friday, February 27, 2009

அனுபவம்

நாம் நமது அனுபவத்தை இரண்டு வகையாக கூறலாம்.

1. ஆட்படும் அனுபவம் அல்லது சிறப்பான அனுபவம்

2. மோசமான அனுபவம்

சிறப்பான அனுபவம் - எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதிலிருந்து கண்டிப்பாக ஏதாவதொரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மோசமான அனுபவம் - ஒரு செயலை செய்யும் போது அதிலிருந்து எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ளவில்லையோ அது மோசமான அனுபவம்.

அனுபவத்தின் சிறப்பு - உலகிற்கே வெளிச்சம் கொடுக்கக்கூடிய மின்சார விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வாய் எடிசன் முதல் முறையிலேயே பல்பைக் கண்டுபிடித்து விடவில்லை. ஏறக்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு தான் அவர் 'பல்பைக்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள். அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்று தான் வெற்றி பெற்றது இல்லையா....?' என்று அவரிடம் யாரோ ஒருவர் கேட்டார்.

எடிசனின் பதில்... முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது? ஒரு பல்பை உருவாக்க தவறாக முயற்சி செய்வது எப்படி? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேன் என்று கூறி, அவரது மோசமான அனுபவத்தை கூட சிறப்பித்துக்கூறினாறாம்.

நாம் நமது ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம். அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.

Thursday, February 26, 2009

சமமான வெற்றி

நாம் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். அப்போது இருவரும் இரு மாறுபட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு "நான் சொல்வது தான் சரி", "நான் சொல்வது தான் சரி" என்று வாதாடுகிறோம். இங்கு ஒருவருக்கு ஆதரவாக சொன்னால் மற்றவர் தோற்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இந்த இருவருமே "என்னுடைய கருத்து சரியா" என்று பார்க்காமல் இந்த நேரத்துக்கு எது சரி என்று கருத்தின் தன்மையைய் மட்டும் பார்த்து முடிவுக்கு வரும் போது பிரச்சனைக்கு தீர்வு கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவரும் வெற்றி அடைந்தது போல் சந்தோசப்படுகிறோம். இதற்கு சமமான வெற்றி என்றே கூறலாம்.

உதாரணமாக, லியோனி மற்றும் சாலமன் பாப்பையா போன்றோர்களால் நடத்தப்படும் "பழைய பாடலா, புதிய பாடலா", "தனிக் குடும்பமா, கூட்டுக் குடும்பமா", போன்ற பட்டி மன்றங்களில் “இது தான் சரி” அல்லது “அது தான் சரி” என்று கூறாமல் இந்த நேரத்திற்கு "எது சரி" என்று கருத்தின் தன்மையைய் வைத்தே முடிவை தெரிவிக்கின்றார்கள்.

· ஒரு மரம் சிறந்த மரமா இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பலனை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

· ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனைக் கேட்டு தெரிந்து கொள்வதில்லை. அவனது பழக்க வழக்கங்களையும், அதன் பயனால் அவன் பெரும் சாதனையைகளையும் வைத்துதான் அவனைப் பற்றி உலகம் அறிகிறது.

Tuesday, February 24, 2009

கோபம்

யாராவது நம்மைப் பார்த்து 'சோம்பேறி', 'நீ எதற்கும் லாயக்கி இல்லாதவன்', 'உன்னால் ஒரு புரியோஞனமும் கிடையாது' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறினால் நம்முள் பயங்கரமாக கோபம் வருகிறது. நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி சொன்ன வார்த்தையைய் ஒரு போதும் யோசிக்கவும் மாட்டோம், நம்மைப்பற்றி கூறியது என்று எடுத்துக் கொள்ளவும் மாட்டோம்.

இவ்வாறாக இன்னொருவரை திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்... திட்டப்பட்டவர் அவர் கூறிய ஏதாவது ஒரு குணம் உடையவராகத்தான் இருக்கும்.அப்படியாக இல்லாமல், இவர் நம்மைத் திட்டி விட்டாரே அது எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என்று நினைத்தால் தான் 'கோபம்' வருகிறது, இரத்த அழுத்தம் கூடுகிறது, இதயத் துடிப்பின் படபடப்பு அதிகரிக்கிறது, வார்த்தைகளில் தெளிவின்மை காணப்படுகிறது.

ஆகையால் நம்மைப் பற்றி யார் எது சொன்னாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டு நாம் அந்த வார்த்தைகளுக்கு பொறுத்தமானவரா என்று சற்று யோசிப்போம். இல்லையென்றால் அந்த வார்த்தைகளை கூறியவரையே சாறும்.

நாம் ந‌ம்மைப்ப‌ற்றி தெளிவாக‌ இருந்தோமானால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌டுமையான‌ வார்த்தைக‌ளுக்கு இட‌மேது...

Monday, February 23, 2009

மனம் பக்குவமடைதல்

நமக்கு வருகின்ற‌ துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் மனம் பக்குவமடைகிறது. ஆரம்பக்கட்டத்தில் சிறிய துன்பங்கள் கூடப் பெரிதாகத் தெரியும். அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.

ரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய் வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது. ஒரு கால கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது. இப்படி ஒரு மனிதன் பழக்கமடைந்துவிட்டால் அவனது மனம் பக்குவமடைகிறது. அவன் அனைத்து இன்ப துபன்பங்களையும் சம அளவிலேயே கருதுகிறான். இதற்கு ஒவ்வரு மனிதனும் உதாரணமே!!!

மனம் பக்குவமடைதல் பற்றிய பாடல் வரிகள்.

ஆவின மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியான் மெய்நோவ அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்

தள்ள வொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள் வந்து தட்சணைகள் கொடுஎன் றாரே! ! !

விளக்கம்:

ஒரே நேரத்தில் ஒரு மனிதனுக்கு வரும் துயரங்களின் வரிசையைய் பாருங்கள்.

· பசு மாடு கன்று போட்டதாம்.

· அடாத மழை பெய்ததாம்.

· வீடு இடிந்து விழுந்து விட்டதாம்.

· மனைவிக்கு கடுமையான நோய் வந்ததாம்.

· வேலைக்காரன் இறந்து போனானாம்.

· வயலில் ஈரம் இருக்கிறது விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

· வழியில் கடன்காரர்கள் மடியைய் பிடித்து இழுத்தார்களாம்.

· "உன் மகன் இறந்து போனான்" என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.

· இந்த நேரத்தில் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.

· பாம்பு அவனைக் கடித்து விட்டதாம்.

· நிலவரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.

· குருக்களும் தட்சினைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் அழுகையா வரும்? இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு ஒருவன் மனம் மரத்துப் போகும். மரத்துப் போன நிலையில் துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். "நாமார்க்கும் குடியல்லாம் யோம், நமனை அஞ்சோம்" என்ற தைரியம் வந்து விடும். சிறதளவு இன்பமும் பெரிதாகத் தோன்றும். பேராசை அடிபட்டுப் போகும்.

கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் மனம் பக்குவமடைதல் பற்றி இவ்வாறு கூறுகிறது.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே...

எனவே நாம் துன்பங்களைக்கண்டு தயங்க வேண்டாம், துன்பங்களே நம் மனதைப்பக்குவப்படுத்தி நல்ல மனிதனாக மாற உதவுகிறது.

Wednesday, February 18, 2009

ஞானம்

ரு மனிதன் தனது இன்ப துன்பங்களை சமஅளவில் ஏற்றுக்கொள்வதே ஞானம். இந்த ஏற்றுக் கொள்ளுதலில் இது 'இவ்வளவுதான், இப்படித்தான்' என்று தேறுவதும், எல்லாம் 'இறைவன் விட்ட வழி' என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதலுமே ஞானம்.

இந்த பக்குவபடுதலை நாம் 'பட்டறி' மற்றும் 'கெட்டறி' என்கிறோம். அதாவது

· 'பட்டறி' - பட்டால் தான் அறிவு வரும். "தனது அனுபவத்தால் அறிதல்".

· 'கெட்டறி' - கெட்டால் தான் தெளிவு வரும். "தவறு செய்தல் மனித இயல்பே ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதிருத்தல்".

துயரங்கள் நிறைந்த மனதிற்கு ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும். அதனை அறிந்து ஏற்றுக் கொள்ளும் விதமே 'ஞானம்'.

இன்ப துன்பங்களின் இருநிலைகள்:

· முதல்நிலை, நம்மையறியாமல் வருவது நாம் அறியாமல் தீர்க்கப்படுகிறது. இதனையே கடவுளின் அருள் என்கிறோம்.

· இரண்டாவது நிலை, நாம் அறிந்து ஏற்படும் துன்பங்களை, நாமே நமது அறிவின் கூர்மையால் தீர்க்கிறோம். இதனை நமதுஅறிவு என்கிறோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்ப துன்பங்கள் சகஜமானபோதிலும்

உங்கள் ஞானத்தால் அனைத்திற்கும் நல்ல முடிவை கொடுத்திடமுடியும்.

Tuesday, February 17, 2009

மதியும் விதியும்

மதி - அறிவு

விதி - நமது அறியாமையால் நடக்கும் ஒவ்வொன்றின் மீதும் மற்றவரை காரணம் காட்டுவது.

  • அறிவு எல்லோருக்கும் தெளிவாக இருந்து விட்டால் விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.
  • அறியாமையே விதியின் கைப்பாவை.
  • எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவிற்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயர் தான் விதி.

உதாரணம்:

  • பள்ளம் என்று தெரியும் போது அதில் விழாதே என்று தெரிய வைத்தது மதி.
  • மதியால் விதியைய் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய முடியாது.
  • ஒரு சில சமயங்களில் நாம் எண்ணிய கரும காரியங்கள் நிறைவேறாத போது நாம் நமக்குள் கூறிக் கொள்ளும் ஒரே வார்த்தை 'ஆண்டவன் விதித்த விதி'.
  • அந்த காரியம் ஏன் நிறைவேறவில்லை என ஆராய்ச்சி செய்தால் அதுவே மதி.

பழமொழி கூறுவது:

“விதியைய் மதியால் வெல்லலாம்”

“மதியைய் விதி வென்றுவிடும்”.

“விதியும் மதியும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாயினும், உங்களின் அறியாமையை நீங்கள் அகற்றினால் அந்த மதி எந்த விதியையும் ஜெயித்திடும்”

Monday, February 16, 2009

வெற்றி உன்னையும் முத்தமிடும்

  • வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினார் - தோல்வி.
  • மாகாண சட்ட சபைக்கு போட்டியிட்டார் - தோல்வி.
  • நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது - உடலளவான தோல்வி.
  • மறுபடியும் தேர்தலில் குதித்தார் - தோல்வி.
  • முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் - தோல்வி.
  • பிறகு மக்கள் மன்றத் தேர்தலில் போட்டியிட்டார் – தோல்வி.
  • 52வது வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் - வெற்றி அவரை முத்தமிட்டது.

30 வருட காலங்கள் தன் வாழ்நாளில் தோல்வி ஒன்றையே சந்தித்த மாமனிதன் இறுதியாக தன் புகழ் உலகமெங்கும் பரவும் வண்ணம் வெற்றியை சந்தித்தார். அந்த மாமனிதர் தான் அப்ரஹாம் லிங்கன்.

ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டதாக மகிழ்வடை!

அந்த மகிழ்ச்சியே உன்னை வெற்றிக்கு இழுத்துச்செல்ல உதவும் மிகப்பெரும் சக்தியாகமாறிவிடும்!!!

Friday, February 13, 2009

ஆணவம்

ஒரு நாட்டின் ராஜா முனிவரிடம் வரம் வாங்குவதற்காக காட்டுக்குச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரிடம் ராஜா தன்னைப்பற்றி இவ்வாறு எடுத்துக் கூறினார்.

  • நான் இந்த நாட்டின் ராஜா.
  • நான் நிறைய பொருள் சேர்த்து வைத்துள்ளேன்.
  • நான் சேர்த்து வைத்துள்ள தானியங்களால் தானியக் கிடங்குகள் நிறைந்து வலிகின்றன.
  • நான் கவர்ந்து வந்துள்ள மற்ற நாட்டு அழகிகள் அந்தப்புரத்தில் குவிந்து உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

தியானத்தில் இருந்து கண் விழித்த முனிவர் "நான் செத்த பின் வா" கூறிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் . கோபமுற்ற ராஜா, நான் இந்த நாட்டின் ராஜா என்னை அவமானப் படுத்துகிறாயா என்று கூறி தனது கத்தியைய் எடுத்தார். அப்போது முனிவர் இவ்வாறு கூறினார். 'நான்' என்ற இறுமாப்பு அல்லது 'நான்' என்ற ஆணவம் செத்தபின் என்னை வந்து பார் வரம் தருகிறேன்.

பொருள்:

  • 'ஆணவம்' நிமிர்ந்து சென்று அடிவாங்குகிறது.
  • 'ஞானம்' பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
  • 'நம்மிடம் ஏதுமில்லை' என்று நினைப்பது ஞானம்.
  • 'நம்மைத் தவிர ஏதுமில்லை' எனறு நினைப்பது ஆணவம்.
  • 'அறிவு குறைவானவர்களுக்கே' ஆணவம் வருகிறது.

நிறை குடங்கள் 'ஆணவம்' கொள்வதில்லை ஆதலால்தான் என்றும் பெருமிதத்துடன் காணப்படுகிறார்கள்!

Wednesday, February 11, 2009

நிம்மதி

யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு.

ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை.

பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத குடும்பங்களில் பிரச்சனை.

அன்பிருந்தும் பணம் இருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களில் பிரச்சனை.

பழமொழி கூறுவது:

"வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள்"

"ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும் என்பார்கள்"

பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை. ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை. அந்த நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை.

நிம்மதி அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது!!!

நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக உன் தாயின் இரு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.நீ பிறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.

நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!!

எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுங்கள்! தவறில்லை... ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனைகளில் உங்கள் நிம்மதியை நீங்களே குறைத்திட வேண்டாம்.

நம்பிக்கையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் வாழப்பழகுங்கள் நிம்மதி உங்களைத்தேடி வரும்!!!

Tuesday, February 10, 2009

பாராட்டு

மேலதிகாரி நம்மைப்பார்த்து சபாஷ் நீ நன்றாக வேலை செய்கிறாய் என்று ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னால் நாம் சந்தோசத்தில் மிதப்போம்.அதே மேலதிகாரி நம்மை ஒரு வார்த்தை திட்டி விட்டால் நம் சந்தோசம் அனைத்தும் ஒட்டு மொத்தமாகப் போய்விடும்.

இதைத்தான் சொல் வேந்தன் சுகி சிவம் அவர்கள் மிகவும் அழகாக சொல்வார்.

"பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!"

"பிறர் உங்களை பாராட்டாத பொழுதும்,

நீங்கள் மற்றவர்களை பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!"

- நன்றி: சுகி சிவம்.

Friday, February 6, 2009

காலத்தின் அருமை

இன்ன ஆண்டில் இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால் அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

  • உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!
  • பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்பவன் பயனற்ற பிறவிகளே.
  • எந்த காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அந்தக் காலத்தில் அதை செய்து விட வேண்டும் இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

ஒரு வருஷம் முடிகிறது என்றால் ஒரு வயது முடிகிறது என்று பொருள். வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர இறங்குகிற சக்தி கிடையாது. எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பது தான் கேள்வி.

திருக்குறள் கூறுவது:

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்.

பொருள்: செயலுக்கேற்ற காலமும் இடமும் அறிந்து செயல்பட்டால், உலகையே பெற விரும்பினாலும் பெற முடியும்.

பழமொழிகள் கூறுவது:

காலம் பார்த்து பயிர் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

ஆடிப் பட்டம் தேடி விதை.

வினை விதித்தவன் வினையருப்பான். திணை விதித்தவன் திணையருப்பான்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒவ்வாது வானம் பெயல்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

Thursday, February 5, 2009

அசாதாரணமான மனிதன்

ஜெர்மானியராகப் பிறந்தவர் ஐன்ஸ்டீன். நாஜீகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர்.. அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிசாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவரை அந்த ஆராய்ச்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றிக்காட்டி திருப்திதானா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

ஐன்ஸ்டீன் சற்று தயங்கி தாழ்ந்த குரலில் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறது, கொஞ்சம் பெரிய குப்பைக் கூடை இருந்தால்" நல்லது என்றார். "பெரிய குப்பைக் கூடையா" எதற்கு? விளக்கம் - நான் என்ன மேதாவியா… எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன், எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்த எறிந்து விட்டு மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாக செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளை புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும் என்றார்.

சாதாரணங்களில் இருந்து தான் அசாதாரணங்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சரணமாகி விடாதிர்கள். சின்னச் சின்னச் சறுக்கல்கள், வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையைய் இழக்காதீர்கள். நாமும் ஒரு நாள் சாதாரணமாக இருந்து தான் அசாதாரண மனிதனாக இந்த உலகுக்கு அறிவிப்போம். அது வரை வெற்றியோடு போராடுவோம்.

உதாரணம்: தனது நான்கு வயது குழந்தைப் பருவத்திலேயே "காது கேளாதவன்", "படிக்க லாய்க்கையில்லை" என்று ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு அந்த சிறுவன் பிற்காலத்தில் பல்பை கண்டுபிடித்து இருட்டை அகற்றி வெளிச்சம் தந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வாய் எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி உலகில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களிலும் அறிவியல் பாடமாக கற்பிக்கப்படுகிறது.

தனது 67வது வயதில் பல லட்சம் பெறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. அப்போது அவர் கூறியது "நல்லது. என் தவறுகள் எல்லாம் எரிந்து போயின, என் பிழைகள் யாவும் தீயில் கருகிவிட்டன". கடவுளுக்கு நன்றி. "இனி ஒரு புதிய தொடக்கம்" என்றார். மூன்றே வாரத்தில் அவர் "போனோகிராப்" என்பதனைக் கண்டறிந்தார்.


இது போன்ற எண்ணங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுமானால் அனைத்து சாதாரண மனிதர்களும் அசாதாரமாணவர்களே.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

Tuesday, February 3, 2009

ஏழ்மை

பிறக்கும் போது ஏழ்மையாகப் பிறப்பது வெட்கத்திற்கு உரியதல்ல. வாழும் பொழுது ஏழ்மையாக இருத்தல் வெட்கத்திற்குரியது.

உதாரணம்:

· தமிழகத்தின் தென் கோடியான ராமேஸ்வரத்தில் வீடு வீடாக பேப்பர் போட்டுக் கொண்டு இருந்த சிறுவனைப் பற்றி உலகத்தில் உள்ள ஒவ்வொரு பேப்பரின் முதல் பக்க செய்தியாக வருகிறது. அவர் தான் ஏவுகனையின் தந்தை, முன்னாள் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள்.

· ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, வயலில் வேலை பார்த்தபடியே கரித்துண்டில் மணலில் எழுதிப்படித்து பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தவர் மரியாதைக்குரிய அபிரஹாம் லிங்கன் அவர்கள்.

ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல தாழ்வு மனப்பான்மையை தூரம் தள்ளினால்!!!

Monday, February 2, 2009

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்

வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?

· காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!

· உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!

· பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...

நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.

ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.

கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.

துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன.

எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!