Tuesday, August 11, 2009

பிள்ளைகளின் அன்பு

ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"

இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.

இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.

உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்.

Monday, June 29, 2009

சிந்தனைகள்

    • நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.



    • சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.


    • சுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Thursday, June 25, 2009

எது அழகு

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

Tuesday, June 23, 2009

புகழ்


புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.

உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

Monday, June 22, 2009

முதல் நாளிலேயே ஞானோதயம்

தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!

Monday, June 8, 2009

மூடநம்பிக்கை

‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.

இராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.

“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்"

Tuesday, June 2, 2009

எண்ணியதை அடைதல்

கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்.

Thursday, May 28, 2009

போரட்டம்

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.

இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.

Tuesday, May 26, 2009

கடின உழைப்பு

கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.


உழைப்பின் உதாரணங்கள்:

  • ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.
  • ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது.
  • மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம்.
  • 'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 36 ஆண்டுகள் கடினமாக உழைத்தாராம்.
  • ஒரு வயலின் வித்துவான் தனது கச்சேரியை முடித்தவுடன், யாரோ ஒருவர் மேடையருகில் வந்து “உயிரைக் கொடுத்தாவது உங்களைப் போல வாசிக்கும் திறமையைப் பெற வேண்டும்” என்று சொன்னாராம். “நானும் அதைத்தான் செய்தேன்” என்று வித்வான் பதிலளித்தாராம்.

கடுமையான உழைப்பினால் விளைவதே மன எழுச்சி என்பதை உண‌ர்ந்திடுவோம்!

எதை நீ அதிகமாக விரும்புகிறாய்?

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.


சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.

Monday, May 25, 2009

முயலாமை மே 21, வியாழன் 2009

நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறுதூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது. சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.
நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல் ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல் ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமை ஜெயித்தது, முயல் தோற்றது’ என்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதை அப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது(முயல் + ஆமையால் தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள்.
கட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும் வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.

கட்டுப்பாடு ‍ பழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றி தரும் சக்தியாகும்.

Wednesday, May 20, 2009

ஆசையின் அழிவு மே 19, செவ்வாய் 2009

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.
உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.

வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.
அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.
விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.

யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.
கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.
இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.

ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

ஆன்மா மே 18, திங்கள் 2009

திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது” என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.

பாலை’ வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் ‘உலகம் அழியும் வரை’ அதுவும் அழியாது.
ஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.
இவ்வாறு, அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவே ‘தான்’ என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள். மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள். ஆனால், ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஆன்மாவை தங்களது எழுத்துக்களின் மூலம் இன்றும் மக்களின் மனதில் உலாவ விட்டு சென்றுள்ள மாமேதைகளில் சிலர்:• ‘அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்’ அப்போது சாவுமங்கே அழிந்து போகும் என்று கூறிய பாட்டுக்கொரு பாரதி .• ‘நேருவா மறைந்தார், இல்லை. நேர்மைக்குச் சாவே இல்லை’.‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லை மார்பினில் சூட’.‘சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராத’ என்று நேருவின் இறங்கல்பாவில் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் நேருவின் நேர்மையை இன்றும் பறைசாற்றுகின்றன.• ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துற்றுவார் துற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கின்ற துணிவு கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.• இந்த ஆன்மா வீரத்தை இறுதியாக ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.
“நான் நிரந்தரமானவான் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.

Tuesday, May 19, 2009

ஆசையின் அழிவு

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.

உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.
வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.

அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.

விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.
யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.

கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
  • புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.
  • இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
  • ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.

ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

Friday, May 15, 2009

பிறரைப் பற்றி எண்ணுதல் மே 15, வெள்ளி 2009

ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.

நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

Wednesday, May 13, 2009

மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.


செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

Monday, May 11, 2009

அன்னையர் தினம் மே 11, திங்கள் 2009

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும். உங்களுக்காக "அன்னையர் தினம்" பற்றிய கட்டுரையைய் இங்கு சமர்ப்பிக்கிறேன்.

தாய்:தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.

· தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.
· தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.
· தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.
· தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.
· தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.
· தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.
· தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.
· தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.


தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
· தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).
· விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.
· தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.
· தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.
· ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.

· அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
· அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.
· தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.
· மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.
· சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.
· காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

· இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

· திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.

தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:
· நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

· என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.

தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:
· அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.

· பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.

திருக்குறள் கூறுவது:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.
விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.


"தாயிற் சிறந்ததொரு கோவிலும்இல்லை!!!"


Friday, May 8, 2009

செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

Thursday, May 7, 2009

அறம் செய்க

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.

அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…

  • ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.
  • மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).
  • சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)

“இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.

“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.

உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.

சுயநலம்

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல..

உதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது!!!

குணம்

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.

துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.

துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

குறள்:

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!

பதற்றம்

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!

பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.

“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.

ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.

Monday, April 20, 2009

தன் கையே தனக்கு உதவி

குரு ஒரு சமயம் பனிப்பிரதேசத்தில் நடந்து செல்கையில் திடீரெனத் தடுமாறி சறுக்கி விழுந்தார். உடனே ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினார். அவரைப் பின்பற்றி வந்த சீடர் ஓடிச் சென்று, குருவின் அருகில் அவரைப் போலவே படுத்துக் கொண்டார். அதைக் கண்ட குரு சிரித்தார். மிகவும் சரி. நீ விழுந்தால் நான் கூட இப்படித்தான் செய்திருப்பேன் என்றார்.

விழத் தெரிந்தவனுக்கு எழவும் தெரியும். விழுவதற்கான சக்தியே எழுவதற்கும். விழுந்தவனை இன்னொருவன் ஒன்றும் செய்ய இயலாது. தன் கையே தனக்கு உதவி என்று அவனவனே அவனவனுக்கு துணை புரிந்து கொள்ள வேண்டும் என்பது குருவின் கருத்து. இதை அழகாக அனைவருக்கும் புரியச் செய்தார்.

நம்மால் முடியும் என்று எண்ணுங்கள்; நாயகன் துணை வருவான்!!!

Wednesday, April 15, 2009

உள்ளுணர்வு

உள்ளுணர்வு… நம்மில் பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் அறியாமலேயே செய்கிறோம். உதாரணமாக, பல் துலக்கும் பழக்கம். காலை எழுந்தவுடனேயே தன்னிச்சையாக நமது கைகள் நம்மை அறியாமலேயே குளியலறைக்குச் சென்று பல்துலக்கும் தூரிகையைய் எடுக்கிறது.இவ்வாறு உள்ளுணர்வு தன்னிச்சையாக செய்வதைப் பற்றி ஆல்டஸ் ஹட்ஸ்லி இவ்வாறு கூறுகிறார். “வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அற்பமானதிலிருந்து மிக முக்கியமானது வரை ஒன்றுக் கொன்று பொருந்தாத இரண்டு நிலைகளை இணைப்பதில்தான் திறமை அடங்கியுள்ளது”.

  • அதிக அளவு செயல், அதிக அளவு ஓய்வு.
  • ஓய்வு பெற வேண்டியது தன்முனைப்பும் உள் மனமும்.
  • செயல்பட வேண்டியது உயிருள்ள ஆத்மா.

இந்த உள்மனம் ஓய்வு பெற வேண்டியதையே ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்…”ஒரு நல்ல நாள், ஒரு நல்ல இரவுத் தூக்கத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது”. இதை நன்கு உணர்ந்தவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். இதற்காக அவர் செய்த சுயபரிசோதனை உண்ணாவிரதம், வாரம் ஒரு முறை பேசாதிருத்தல் போன்றவைகளே. நம்மை வசப்படுத்தி ஆள நமக்குத் தெரிந்தால், நம்மால் சுயபரிசோதனை செய்ய முடியும். நாம் செய்வது சரியா, தவறா என்று நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் போது செயல்கள், முடிவுகள் மற்றும் செயல் முறைகள் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிகிறது. ஓர் இலட்சிய நோக்கும் பாரபட்ச மற்ற மனமும் ஏற்படுகிறது.

“ஒரு சக்தி வாய்ந்த மனிதன் உள்ளத்தில் தோன்றும் ஒற்றை எண்ணம் தான், மாபெரும் நன்மை, தீமைகளைச் செய்கிறது. ஒற்றை எண்ணம் தான் பிரமிடைக் கட்டியது; இஸ்லாமைக் கண்டது; அலெக்சாண்டிரின் நூலகத்தை எரித்தது; தொழுநோயைய் அறவே ஒழித்தது”.

இலக்கு

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீது தாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காக புத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீது தாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரத கதை அழகாக விளக்குகிறது.

துரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒரு பறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும் கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீது மட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம் லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயே அர்ச்சுனன் ‘வில்வித்தையில் சிறந்தவர்’ என்ற பெயர் பெற்றார்.

“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.

Tuesday, April 7, 2009

மனித சிந்தனை

உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.

ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

“உண்மை அறிதல், தன்னை அறிதல்”

Monday, April 6, 2009


நேரம்

ஒரு நிமிடத்திலுள்ள அறுபது நொடிகளையும் நம்மில் பலர் முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறு வீணாகும் நொடிகள் சேர்ந்து இழந்த நிமிடங்கள் ஆகின்றன. இழந்த நிமிடங்கள் சேர்ந்து இழந்த மணிகள் ஆகின்றன. இழந்த மணிகள் இழந்த நாள்களாகவும், நாள்கள் ஆண்டுகளாகவும், ஆண்டுகள் பயனற்ற வாழ்நாளாகவும் ஆகின்றன. அத்தகைய வாழ்நாளில் செய்து முடிக்கப்படாமல் பல விஷயங்கள் நின்று விடுகின்றன.

நேரம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாத ஒன்று. யாருக்காகவும் காத்துக் கொண்டிராது. விலை மதிப்பற்ற இதனை எவ்வளவு புத்திசாலித்தனமாக நாம் பயன்படுத்துகிறோம்? வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு குளிப்பது, அழகுபடுத்திக் கொள்வது ஆகியவற்றில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கு நேரத்தை உறவினர்கள் நாண்பர்களுடன் பேசுவதில் கழிக்கிறோம். இவ்வாறு பல விதத்திலும் 70 சதவிகித நேரம் செலவழிந்து விடுகிறது. பணியாற்றுவதற்காக எஞ்சியிருப்பது 30 சதவிகிதம் தான்.இந்த‌ அருமையான‌ 30 ச‌தவீகித‌ நேர‌த்தை முழு ம‌ன‌துட‌ன் ப‌ணியாற்றிடுவோம். இந்த‌ 30 ச‌த‌வீதத்தில் நாம் அடையும் வெற்றியும் ப‌ல‌னும் தான் ந‌மது மீதியிருக்கும் 70 ச‌த‌வீத‌த்தின் ச‌ந்தோச‌த்திற்கு மூல‌த‌ன‌மாக‌ அமைய‌ப்பெரும்.

சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை!!!

நன்றி

இதோ நமது இன்றைய சிந்தனைப்பூ 'நன்றி' உங்களுக்காய் மலர்கிறது இங்கு!

'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.

'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:
‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’. அதாவது 'உன்னுடைய கர்மம் நன்மை செய்வதானால்' அதையாருக்கு வேண்டுமானாலும் செய். ‘எதை செய்ய விரும்புகிறாயோ அதை செய்து கொண்டே போ’. அதுவே சுதர்மம். நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்று கெட்டவனுக்குக்கூட செய். காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி விடுகிறது. அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.

நன்றி பற்றிய கதை ஒன்று:
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். சந்நியாசி சொன்னார்: 'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' இதுவே சுதர்மம்”.

நன்றி பற்றி ஒளவையார் கூறுவது:
'நன்றி மறவேல்', 'நன்மை கடைபிடி'.
'ஐயம் புகினும் செய்வன செய்' - பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய்.
பயன் கருதாது அறம் செய்க:
நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்வதால் அவ்வுதவியை அவன் எப்பொழுது திருப்பிச் செய்வானோ என்று ஐயுறு வேண்டுவதில்லை (அவ்வுதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும்).

நல்லோர்க்குச் செய்த உதவி:
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.
பொருள்: நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும். நல்லவர் அல்லாத அன்பில்லாத மனமுடையார்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும்(அழிந்து விடும்).

'நன்றி' பற்றி கூறுகையில் வள்ளுவப் பெருந்தகை சற்று விலகி இவ்வாறு கூறுகிறார்.
'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று நீ எல்லோருக்கும் செய்யாதே. யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்'. அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.
ஒருவன் தீமை செய்து இருந்தால் அதை மறந்து விட வேண்டும். ஆனால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது 'நன்றன்று' என்பது இவர் கருத்து.

குறள்:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் விளக்கம்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை. அந்த உதவியைய் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது!!!

Tuesday, March 31, 2009


நாகரிகம்

ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள் ‘புகை பிடிக்க கூடாது’ என்ற இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். தற்செயலாக அதை நிர்வாக மேலாளர் பார்த்து விட்டார். சற்றும் கோபப்படவில்லை அவர்கள் மீது. நேராக தனது இருக்கைக்குச் சென்று தன்னிடம் இருந்த உயர்ந்த ரக சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் தொழிலாளர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை தூக்கி எறிந்து விட்டார்கள். மேலாளர் ஒன்றுமே சொல்லாமல், ஆளுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தார். அவர்கள் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்கள்.அப்போது மேலாளர் கூறியது? “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா?” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் அங்கு சிகரெட் குடிக்கவில்லை.

“அன்பின் மூலம் வெளிப்படுத்தும் நாகரிகம் எப்பொழுதும் வெற்றியையே தரும்”.

Monday, March 30, 2009

தோற்றமும் அறிவும்

அமெரிக்க மக்களுக்கே ஆங்கிலத்தில் அறிவுரை கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு முறை புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கையின் அருகில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் என்றாலே வெறுப்பு தான். அதுவும் துறவி, காவி உடை அணிந்தவர் என்பதை பார்த்தவுடன் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசினர். விவேகானந்தர் பதில் பேசவில்லை, சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் புகைவண்டி நின்றது. அப்பொழுது புகைவண்டி நிலைய அலுவலரை அழைத்து “இங்கே தண்ணீர் கிடைக்குமா” என்று மிக அழகாக ஆங்கிலத்தில் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியத்துடன் திடுக்கிட்டனர். உடனே விவேகானந்தரிடம் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டனர். “நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும்” என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.அப்படியானால் நாங்கள் உங்களை அரை மணி நேரமாக திட்டிக் கொண்டிருந்தோம்… நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை என்றனர். விவேகானந்தரின் பதில்…”நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல”. அவரது புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் சுவையாக இருந்தது.

“ஆளைப் பார்த்தவுடன் யாரையும் தவறாக புரிந்து கொள்வதோ அல்லது

அவரைப் பற்றி தவறாக மதிப்பிடுவதோ வேண்டாம்”.

Friday, March 27, 2009

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.

நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.



இரத்தினச் சுருக்கம் வியாழன், 26 மார்ச் 2009
இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார்.
கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார்.
எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான், சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர். ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன.
ஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று கூறி கதையைய் முடித்தார்.
இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் இராமாயணத்தை முடித்த அந்த பெரியவருக்கு நியை பரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“ஒளவையார் கூறிய, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இது தானோ?”


உயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.
நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

வரதட்சணைக்கயவர்கள்!

கோடுபோட்டு வாழ்ந்த
குடும்பத்தை
கூறு போட வந்த
கோட்டான்கள்!

கன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்
கல்வித்தகுதியையும் கேட்டு
ஆடச் சொல்லி
பாடச் சொல்லி
இன்னும் பல
நாடகம் நடத்தி
பெண்பார்க்கும் படலம்
அரங்கேறுகிறது!

மெய்ப்பொருத்தம்
இல்லையென்றாலும்
காசுக்காக -
பொய்ப்பொருத்தம்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

ஏதுமறியா
இளம் பெண்களை
கயவர்கள் -
கட்டிக் செல்கின்றனர்
அவர்களை
காலமெல்லாம்
கண்ணீர்ப் பெண்களாக்க!

பெண் பார்க்கும் படலத்தின்
அன்றைய அரங்கேற்றம்
அப்பப்பா!
கயவர்கள் -
கையில் சிக்கியபின்
எத்தனையெத்தனை
ஆர்ப்பாட்டம்!

ஜீவனுள்ள போதே
இலவசச் செலவில்
கன்னியர்க்கு
மரணத்தைக் காட்டுகின்றனர்!

மாமியார் என்ற
சர்வாதிகாரிக்கும்
கணவனென்ற
கையாலாகதவனுக்கும்
வரதட்சணையென்ற
வரிப் பணத்திற்கும்
அடிமையாகி
ஐயகோ!
கன்னியர் படும் துயரம்
கணக்கிலடங்கா!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை
அது
படுக்கையறையில் மட்டுமே!
ஐந்து நிமிடங்கள் கழிந்தால்
அந்தோ…
அவ்வுரிமையும்
பறிபோகிறது!

தூ...
மடையர்களே!
உங்களை
ஆணென்று சொல்ல -
ஆண்மையுள்ளவனென்று நினைக்க
உங்களுக்கே
வெட்கமாயில்லையா?

ஏ! கண்ணா!
இந்தக் கயவர்களையெல்லாம்
அழகே இல்லா
அரக்கிககளாய் மாற்றிவிடு!
அப்படியாவது
இவர்களுக்கு
புத்தி வரட்டும்!

ஏ! பாரதியே!
'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல
மாதவம் செய்ய வேண்டும்'
என்றீரே?
இப்போது
மாந்தராய் பிறப்பவரெல்லாம்
மாபாபம்
செய்தவரய்யா....

ஏ! இளைய சமுதாயமே!
காலத்தைப் போல்
உன்
கருத்தையும் மாற்றிக்கொள்!

வரதட்சணைத்
தணலில் வாழும்
இளங்கொடிகளுக்காக
உன்
உறுதித் தேரை
அருகே நிறுத்து!


அப்படியாவது
கன்னிக்கொடிகள்
உங்களை
பின்னி வளரட்டும்!

கலப்புத்திருமணம்
என்ற
கலப்பையால்
ஆழ உழுது
வரதட்சணைக்களை
வேறோடு
உழுது எறி!

உன் வாழ்க்கை
நீ வாழத்தான்.
இன்றே
உறுதி செய்!
நடுத்தர வர்க்கத்தை
அமைதி செய்!

தற்கொலைகள்
தடுக்கப்படும்!
சகல ஜாதியும்
ஒன்று படும்!

Tuesday, March 24, 2009

பழகிப் பார்ப்போம்

இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.

இந்த பழைய பாடல் வரிகளைப் போல,

“ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”.

ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா….

நமது முழுவாழ்க்கையின் சேமிப்பு நமது உணவிற்காகவும், நமது பிற்கால சந்ததிகளின் உணவிற்காகவும் மட்டுமே. இப்பிறவி எடுத்ததன் பயனே இன்பம் மற்றும் துன்பம் அனைத்து அனுபவங்களையும் பெற்று வாழ்வை சந்தோச மயமாக்குவதற்காக மட்டுமே.

உதாரணமாக,

  • தினமும் கடற்கரை ஓரமாக நடப்பவராக இருந்தால் குடிசைப்பக்கம் ஒரு நாள் நடந்து பார்ப்போம்.
  • மூன்று நேரமும் உணவு உண்பதற்கு பதிலாக ஒரு நேரம் நமது வயிற்றை பட்டினி போட்டுப் பார்ப்போம்.

இப்படி வித்தியாசமாக செய்யும் போது உலகமே வேறு விதமாக தோன்றும். ஏழ்மை மற்றும் பட்டினி பற்றி அறிய வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தையும் வாழ்வையும் மேலும் நன்றாக ரசிக்க முடியும்.

சிந்தித்தவர்கள்:

  • இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டரான மாகத்மா காந்தி, ஆங்கில உடை அணிந்து பழகியவர் வெறும் அரைத்துண்டு கட்டி உலவி ‘அஹிம்சை’ என்ற மந்திரத்தின் மூலம் நமக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.
  • அமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் ஷ்வைஸ்டர் ஆப்பிரிக்காவில் குடியேறி மருத்துவமனை திறந்து தொண்டாற்றினார்.
  • யுகோஸ்லாவியாவில் பிறந்து வளர்ந்த ‘ஏழைகளின் சகோதரி’ அன்னை தெரசா மேற்கு வங்காளத்தில் குடியேறி தொழுநோயைய் அறவே ஒழித்தார்.

வாழ்க்கையை இரசித்தல் கோபத்தை தவிர்த்தல், மகிழ்ச்சியைய் பெருக்குதல், கவலைகளை கைவிடுதல் இவையெல்லாம் புதிய உலகின் பல வழிகள்.

Monday, March 23, 2009

உணர்ச்சி

நண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல்? நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவர் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.

உதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், “முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது” என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி

எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

வாழ்வின் வெற்றிப் படிகள்

தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.

தோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:

  • கணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.
  • சிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.
  • நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.

ஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்!!!

நம் எல்லோருடைய வாழ்விலும்!.

Tuesday, March 17, 2009

நினைத்தலும் நடத்தலும்

“நாம் என்ன நினைக்கிறோமோ, தானாகவே மாறுகிறோம்!

நமது எண்ணங்களே, நமது செயல்களாக மாறுகின்றன!!”

உதாரணம்: சோக பாத்திரங்களில் நடித்த ஒரு நடிகை அடிக்கடி சோர்ந்து போவதாகக் கூறி தனது “நடிப்பை” மாற்றிக் கொண்டார். “கால், கை சோர்ந்து விழலானேன்!” என்ற தலைப்பில் ஒரு பாடல் அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. அதை அனுபவித்துப் பாடிய அந்த பாடகியோ தினமும் பல மணி நேரம் களைத்து ஓய்ந்து போய்விடுவாராம். இதை ஒரு நாள் உணர்ந்த அவர் பிறகு அதைக் கச்சேரியில் பாடுவதை நிறுத்தி விட்டாராம்.

நமது ஒரு சில வலிமையான சொற்களே வேதங்களில் மந்திரங்காளாக்கப்பட்டுள்ளன.

திருச்சிற்றம்பலத்தில் “நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க” பாடலை முடிக்கும் போது “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” என்று மூன்று முறை கூறப்பட்டு அந்த பாடல் முடிகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளார்ந்த உணர்வுடன் இந்த “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” பாடல் வரியைய் கூறி முடிக்கும் போது இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மக்களுக்கும் நன்மையே ஏற்படுமாறு வல்லமையான சொற்களை பிராத்திக்கிறோம்.

வலிமை என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும்போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது சோர்வு தருகிறது.

“எந்த எண்ணங்கள் நம் மனத்தில் உலவுகிறதோ அந்த எண்ணங்கள்

அதன் பிரதிபலனை நமக்குக் கொடுக்கின்றன”.

Thursday, March 12, 2009

மகளிரின் பெறுமை

“நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாது என்கின்ற காரணத்தினால் தனித்தனித் தாயின் வயிற்றில் பிறந்து அண்ணன், தம்பிகள் ஆனோம்".

- அறிஞர் அண்ணா.

மகளிர் தின ஆரம்பம்: மார்ச் 8ம் நாள் உலக மகளிர் நாள். எங்கே இந்தக் கருத்து உருவாயிற்று? உலகம் பல புரட்சிகளைச் சந்தித்து இருக்கிறது. அகிலம் திடுக்கிட வைக்கிற பல நிகழ்ச்சிகளைச் சந்தித்து இருக்கிறது. பிரெஞ்சு நாட்டில் எழுந்த புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரல் எழுந்த புரட்சி, மண் குடிசைகள் மாளிகைகளைப் பார்த்து மிரட்டிய புரட்சி. அடிமைகளின் கரங்களில் வீர வாள் ஜொலித்த புரட்சி. அங்கே வெட்டுக் கத்திகளுக்கு முன்னாள் மன்னர்களின் தலைகள், மகாராணிகளின் தலைகள் வெட்டப்பட்ட நிகழ்ச்சி ஐரோப்பியா கண்டத்தையே அச்சுறுத்திய புரட்சி 1759ம் ஆண்டு நடந்தது. அந்த புரட்சி நடந்த போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டு ஆயிரம் பெண்கள் ஆயுதங்களோடு இருந்தார்கள். அந்தப் புரட்சியில் பெண்களும் பங்கு ஏற்றார்கள். அதன் விளைவாகவே 79 ஆண்டுகளுக்குப் பிறகு சம உரிமை எங்களுக்கு வேண்டும், வேலை செய்யும் இடத்தில் உரிமை, தொழிற்சங்கத்தில் உரிமை என்ற குரல் எழுப்பப்பட்டு அதற்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் பெண்களுக்கு வேலை நிறுத்த உரிமைக்கு உத்திரவாதம் வளங்கப்பட்ட காலத்தில்தான், சரியாகப் பிரெஞ்சுப் புரட்சி நடந்து. 130 ஆண்டுகளுக்குப் பிறகு, 1889ம் ஆண்டு கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்களை அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் எழுந்தது, இருபதாம் நூற்றாண்டு பிறந்தது. 1907ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராக கிளாரா ஜெட்கின் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்நது நியூயார்க் நகரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள் "எங்களுக்கு தொழிற்சங்க உரிமை வேண்டும்; எங்களுக்கு வேலையில் நியாயமான நீதி கிடைக்க வேண்டும்" என்று. திரண்டு எழுந்த அவர்கள் குரல் கொடுத்து வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி மூன்று ஆண்டுகள் கழித்து அதே கிளாரா ஜெட்கின் சொன்னார், "இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர்நாள்" என்று.

· ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே மார்ச் 8ம் நாள் சோவியத் யூனியன் பெட்ரோகிராட் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான் பெண்கள் உரிமை வேண்டும், ஒடுக்கு முறையைய் எதிர்ப்போம் என்று அணிவகுத்து வந்தார்கள். இந்த ஒரு அணிவகுப்பு சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.

· 1936ம் ஆண்டு அதே தினம் ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து கொண்டு இருந்த ஃபிராங்கோவை எதிர்த்து 80,000 பெண்கள் மேட்ரிட் நகரில் ஊர்வலம் வந்தார்கள்.

· 1950ம் ஆண்டு அதே தினம் "இனிமேல் அணு ஆயுதம் உலகத்தின் உயிர்களைக் குடிக்கக்கூடாத, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகள் மனித குலத்தை அழித்துவிடக்கூடாது, இந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும்" என்று மூன்று இலட்சம் பெண்கள் ஐரோப்பா கண்டத்தில் அஞ்சல் அட்டை அறப்போர் நடத்திய நாள்.

இந்த அடக்கு முறையில் பலர் பலியாகி இருக்கிறார்கள். துப்பாக்கி முனைகளுக்குத் தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். உலக மகளிர் நாளில், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சிந்தனைப் பூக்கள் – இந்த மகளிர் தின நன்நாளில் உங்களுக்காக மகளிர் பற்றிய கட்டுரை பெண்மை என்ற தலைப்பில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!