Tuesday, March 31, 2009


நாகரிகம்

ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள் ‘புகை பிடிக்க கூடாது’ என்ற இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். தற்செயலாக அதை நிர்வாக மேலாளர் பார்த்து விட்டார். சற்றும் கோபப்படவில்லை அவர்கள் மீது. நேராக தனது இருக்கைக்குச் சென்று தன்னிடம் இருந்த உயர்ந்த ரக சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் தொழிலாளர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை தூக்கி எறிந்து விட்டார்கள். மேலாளர் ஒன்றுமே சொல்லாமல், ஆளுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தார். அவர்கள் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்கள்.அப்போது மேலாளர் கூறியது? “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா?” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் அங்கு சிகரெட் குடிக்கவில்லை.

“அன்பின் மூலம் வெளிப்படுத்தும் நாகரிகம் எப்பொழுதும் வெற்றியையே தரும்”.

Monday, March 30, 2009

தோற்றமும் அறிவும்

அமெரிக்க மக்களுக்கே ஆங்கிலத்தில் அறிவுரை கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு முறை புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கையின் அருகில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் என்றாலே வெறுப்பு தான். அதுவும் துறவி, காவி உடை அணிந்தவர் என்பதை பார்த்தவுடன் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசினர். விவேகானந்தர் பதில் பேசவில்லை, சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் புகைவண்டி நின்றது. அப்பொழுது புகைவண்டி நிலைய அலுவலரை அழைத்து “இங்கே தண்ணீர் கிடைக்குமா” என்று மிக அழகாக ஆங்கிலத்தில் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியத்துடன் திடுக்கிட்டனர். உடனே விவேகானந்தரிடம் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டனர். “நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும்” என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.அப்படியானால் நாங்கள் உங்களை அரை மணி நேரமாக திட்டிக் கொண்டிருந்தோம்… நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை என்றனர். விவேகானந்தரின் பதில்…”நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல”. அவரது புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் சுவையாக இருந்தது.

“ஆளைப் பார்த்தவுடன் யாரையும் தவறாக புரிந்து கொள்வதோ அல்லது

அவரைப் பற்றி தவறாக மதிப்பிடுவதோ வேண்டாம்”.

Friday, March 27, 2009

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.

நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.



இரத்தினச் சுருக்கம் வியாழன், 26 மார்ச் 2009
இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார்.
கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார்.
எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான், சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர். ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன.
ஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று கூறி கதையைய் முடித்தார்.
இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் இராமாயணத்தை முடித்த அந்த பெரியவருக்கு நியை பரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“ஒளவையார் கூறிய, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இது தானோ?”


உயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.
நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

வரதட்சணைக்கயவர்கள்!

கோடுபோட்டு வாழ்ந்த
குடும்பத்தை
கூறு போட வந்த
கோட்டான்கள்!

கன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்
கல்வித்தகுதியையும் கேட்டு
ஆடச் சொல்லி
பாடச் சொல்லி
இன்னும் பல
நாடகம் நடத்தி
பெண்பார்க்கும் படலம்
அரங்கேறுகிறது!

மெய்ப்பொருத்தம்
இல்லையென்றாலும்
காசுக்காக -
பொய்ப்பொருத்தம்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

ஏதுமறியா
இளம் பெண்களை
கயவர்கள் -
கட்டிக் செல்கின்றனர்
அவர்களை
காலமெல்லாம்
கண்ணீர்ப் பெண்களாக்க!

பெண் பார்க்கும் படலத்தின்
அன்றைய அரங்கேற்றம்
அப்பப்பா!
கயவர்கள் -
கையில் சிக்கியபின்
எத்தனையெத்தனை
ஆர்ப்பாட்டம்!

ஜீவனுள்ள போதே
இலவசச் செலவில்
கன்னியர்க்கு
மரணத்தைக் காட்டுகின்றனர்!

மாமியார் என்ற
சர்வாதிகாரிக்கும்
கணவனென்ற
கையாலாகதவனுக்கும்
வரதட்சணையென்ற
வரிப் பணத்திற்கும்
அடிமையாகி
ஐயகோ!
கன்னியர் படும் துயரம்
கணக்கிலடங்கா!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை
அது
படுக்கையறையில் மட்டுமே!
ஐந்து நிமிடங்கள் கழிந்தால்
அந்தோ…
அவ்வுரிமையும்
பறிபோகிறது!

தூ...
மடையர்களே!
உங்களை
ஆணென்று சொல்ல -
ஆண்மையுள்ளவனென்று நினைக்க
உங்களுக்கே
வெட்கமாயில்லையா?

ஏ! கண்ணா!
இந்தக் கயவர்களையெல்லாம்
அழகே இல்லா
அரக்கிககளாய் மாற்றிவிடு!
அப்படியாவது
இவர்களுக்கு
புத்தி வரட்டும்!

ஏ! பாரதியே!
'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல
மாதவம் செய்ய வேண்டும்'
என்றீரே?
இப்போது
மாந்தராய் பிறப்பவரெல்லாம்
மாபாபம்
செய்தவரய்யா....

ஏ! இளைய சமுதாயமே!
காலத்தைப் போல்
உன்
கருத்தையும் மாற்றிக்கொள்!

வரதட்சணைத்
தணலில் வாழும்
இளங்கொடிகளுக்காக
உன்
உறுதித் தேரை
அருகே நிறுத்து!


அப்படியாவது
கன்னிக்கொடிகள்
உங்களை
பின்னி வளரட்டும்!

கலப்புத்திருமணம்
என்ற
கலப்பையால்
ஆழ உழுது
வரதட்சணைக்களை
வேறோடு
உழுது எறி!

உன் வாழ்க்கை
நீ வாழத்தான்.
இன்றே
உறுதி செய்!
நடுத்தர வர்க்கத்தை
அமைதி செய்!

தற்கொலைகள்
தடுக்கப்படும்!
சகல ஜாதியும்
ஒன்று படும்!

Tuesday, March 24, 2009

பழகிப் பார்ப்போம்

இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.

இந்த பழைய பாடல் வரிகளைப் போல,

“ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”.

ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா….

நமது முழுவாழ்க்கையின் சேமிப்பு நமது உணவிற்காகவும், நமது பிற்கால சந்ததிகளின் உணவிற்காகவும் மட்டுமே. இப்பிறவி எடுத்ததன் பயனே இன்பம் மற்றும் துன்பம் அனைத்து அனுபவங்களையும் பெற்று வாழ்வை சந்தோச மயமாக்குவதற்காக மட்டுமே.

உதாரணமாக,

  • தினமும் கடற்கரை ஓரமாக நடப்பவராக இருந்தால் குடிசைப்பக்கம் ஒரு நாள் நடந்து பார்ப்போம்.
  • மூன்று நேரமும் உணவு உண்பதற்கு பதிலாக ஒரு நேரம் நமது வயிற்றை பட்டினி போட்டுப் பார்ப்போம்.

இப்படி வித்தியாசமாக செய்யும் போது உலகமே வேறு விதமாக தோன்றும். ஏழ்மை மற்றும் பட்டினி பற்றி அறிய வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தையும் வாழ்வையும் மேலும் நன்றாக ரசிக்க முடியும்.

சிந்தித்தவர்கள்:

  • இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டரான மாகத்மா காந்தி, ஆங்கில உடை அணிந்து பழகியவர் வெறும் அரைத்துண்டு கட்டி உலவி ‘அஹிம்சை’ என்ற மந்திரத்தின் மூலம் நமக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.
  • அமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் ஷ்வைஸ்டர் ஆப்பிரிக்காவில் குடியேறி மருத்துவமனை திறந்து தொண்டாற்றினார்.
  • யுகோஸ்லாவியாவில் பிறந்து வளர்ந்த ‘ஏழைகளின் சகோதரி’ அன்னை தெரசா மேற்கு வங்காளத்தில் குடியேறி தொழுநோயைய் அறவே ஒழித்தார்.

வாழ்க்கையை இரசித்தல் கோபத்தை தவிர்த்தல், மகிழ்ச்சியைய் பெருக்குதல், கவலைகளை கைவிடுதல் இவையெல்லாம் புதிய உலகின் பல வழிகள்.

Monday, March 23, 2009

உணர்ச்சி

நண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல்? நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவர் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.

உதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், “முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது” என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி

எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

வாழ்வின் வெற்றிப் படிகள்

தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.

தோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:

  • கணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.
  • சிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.
  • நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.

ஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்!!!

நம் எல்லோருடைய வாழ்விலும்!.

Tuesday, March 17, 2009

நினைத்தலும் நடத்தலும்

“நாம் என்ன நினைக்கிறோமோ, தானாகவே மாறுகிறோம்!

நமது எண்ணங்களே, நமது செயல்களாக மாறுகின்றன!!”

உதாரணம்: சோக பாத்திரங்களில் நடித்த ஒரு நடிகை அடிக்கடி சோர்ந்து போவதாகக் கூறி தனது “நடிப்பை” மாற்றிக் கொண்டார். “கால், கை சோர்ந்து விழலானேன்!” என்ற தலைப்பில் ஒரு பாடல் அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. அதை அனுபவித்துப் பாடிய அந்த பாடகியோ தினமும் பல மணி நேரம் களைத்து ஓய்ந்து போய்விடுவாராம். இதை ஒரு நாள் உணர்ந்த அவர் பிறகு அதைக் கச்சேரியில் பாடுவதை நிறுத்தி விட்டாராம்.

நமது ஒரு சில வலிமையான சொற்களே வேதங்களில் மந்திரங்காளாக்கப்பட்டுள்ளன.

திருச்சிற்றம்பலத்தில் “நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க” பாடலை முடிக்கும் போது “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” என்று மூன்று முறை கூறப்பட்டு அந்த பாடல் முடிகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளார்ந்த உணர்வுடன் இந்த “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” பாடல் வரியைய் கூறி முடிக்கும் போது இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மக்களுக்கும் நன்மையே ஏற்படுமாறு வல்லமையான சொற்களை பிராத்திக்கிறோம்.

வலிமை என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும்போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது சோர்வு தருகிறது.

“எந்த எண்ணங்கள் நம் மனத்தில் உலவுகிறதோ அந்த எண்ணங்கள்

அதன் பிரதிபலனை நமக்குக் கொடுக்கின்றன”.

Thursday, March 12, 2009

மகளிரின் பெறுமை

“நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாது என்கின்ற காரணத்தினால் தனித்தனித் தாயின் வயிற்றில் பிறந்து அண்ணன், தம்பிகள் ஆனோம்".

- அறிஞர் அண்ணா.

மகளிர் தின ஆரம்பம்: மார்ச் 8ம் நாள் உலக மகளிர் நாள். எங்கே இந்தக் கருத்து உருவாயிற்று? உலகம் பல புரட்சிகளைச் சந்தித்து இருக்கிறது. அகிலம் திடுக்கிட வைக்கிற பல நிகழ்ச்சிகளைச் சந்தித்து இருக்கிறது. பிரெஞ்சு நாட்டில் எழுந்த புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரல் எழுந்த புரட்சி, மண் குடிசைகள் மாளிகைகளைப் பார்த்து மிரட்டிய புரட்சி. அடிமைகளின் கரங்களில் வீர வாள் ஜொலித்த புரட்சி. அங்கே வெட்டுக் கத்திகளுக்கு முன்னாள் மன்னர்களின் தலைகள், மகாராணிகளின் தலைகள் வெட்டப்பட்ட நிகழ்ச்சி ஐரோப்பியா கண்டத்தையே அச்சுறுத்திய புரட்சி 1759ம் ஆண்டு நடந்தது. அந்த புரட்சி நடந்த போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டு ஆயிரம் பெண்கள் ஆயுதங்களோடு இருந்தார்கள். அந்தப் புரட்சியில் பெண்களும் பங்கு ஏற்றார்கள். அதன் விளைவாகவே 79 ஆண்டுகளுக்குப் பிறகு சம உரிமை எங்களுக்கு வேண்டும், வேலை செய்யும் இடத்தில் உரிமை, தொழிற்சங்கத்தில் உரிமை என்ற குரல் எழுப்பப்பட்டு அதற்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் பெண்களுக்கு வேலை நிறுத்த உரிமைக்கு உத்திரவாதம் வளங்கப்பட்ட காலத்தில்தான், சரியாகப் பிரெஞ்சுப் புரட்சி நடந்து. 130 ஆண்டுகளுக்குப் பிறகு, 1889ம் ஆண்டு கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்களை அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் எழுந்தது, இருபதாம் நூற்றாண்டு பிறந்தது. 1907ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராக கிளாரா ஜெட்கின் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்நது நியூயார்க் நகரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள் "எங்களுக்கு தொழிற்சங்க உரிமை வேண்டும்; எங்களுக்கு வேலையில் நியாயமான நீதி கிடைக்க வேண்டும்" என்று. திரண்டு எழுந்த அவர்கள் குரல் கொடுத்து வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி மூன்று ஆண்டுகள் கழித்து அதே கிளாரா ஜெட்கின் சொன்னார், "இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர்நாள்" என்று.

· ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே மார்ச் 8ம் நாள் சோவியத் யூனியன் பெட்ரோகிராட் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான் பெண்கள் உரிமை வேண்டும், ஒடுக்கு முறையைய் எதிர்ப்போம் என்று அணிவகுத்து வந்தார்கள். இந்த ஒரு அணிவகுப்பு சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.

· 1936ம் ஆண்டு அதே தினம் ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து கொண்டு இருந்த ஃபிராங்கோவை எதிர்த்து 80,000 பெண்கள் மேட்ரிட் நகரில் ஊர்வலம் வந்தார்கள்.

· 1950ம் ஆண்டு அதே தினம் "இனிமேல் அணு ஆயுதம் உலகத்தின் உயிர்களைக் குடிக்கக்கூடாத, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகள் மனித குலத்தை அழித்துவிடக்கூடாது, இந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும்" என்று மூன்று இலட்சம் பெண்கள் ஐரோப்பா கண்டத்தில் அஞ்சல் அட்டை அறப்போர் நடத்திய நாள்.

இந்த அடக்கு முறையில் பலர் பலியாகி இருக்கிறார்கள். துப்பாக்கி முனைகளுக்குத் தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். உலக மகளிர் நாளில், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சிந்தனைப் பூக்கள் – இந்த மகளிர் தின நன்நாளில் உங்களுக்காக மகளிர் பற்றிய கட்டுரை பெண்மை என்ற தலைப்பில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

நல்லோர் அறிதல்

நல்லவன், கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ஒருவனை பல நாட்கள் ஆராய்வது. ஆராய்ந்து தெளிந்த பின் நட்பு கொள்வது.

'ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்' என்றார் வள்ளுவப் பெருந்தகை.

'தீயவர்' என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையாக 'நீரவர்' என்று வள்ளுவர் கூறுகிறார்.

அதாவது, பிறை நாளும் வளர்வது போல அறிவுடையார் நட்பு வளரும்; முழுநிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

குறள்:

நாடாது நட்டலில் கேடில்லை; நட்டபின்

வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.

பொருள்:விரும்பி நட்பு செய்தவர்க்கு, ஒருவருடன் நட்பு கொண்டபின் அந்த நட்பை விடுவது கடினம்; அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக்காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே- நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று.

விளக்கம்: நல்லவரைக் காண்பதுவும், அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும். அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடி இருப்பதுவும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.

நலம் வாழ்வோம்!

பரபரப்பான உலகிலே
துருதுருப்பான இளைஞரே!
சுறு சுறுப்பாய் உழைக்கவே
விறுவிறுப்பாய் வாருங்கள்!

அவன் உயர்ந்தான்
இவன் சரிந்தான்
என்ற பேச்சே நமக்கெதற்கு?
நாம் உழைப்போம் நலம் பிழைப்போம்
ஓடி வாருங்கள் தோழர்களே - இனியும்
ஓய்ந்து கிடந்தால் நாம் வீணர்களே!

எட்டிப்பார் வெளியுலகை - நீ
நாட்டிப்பார் உன் உழைப்பை!
வெற்றிக் கனிகள் உன் கையில்
நிச்சயம் வந்து விளையாடும்!

நாட்டை வீட்டை ஒரு போல் உயர்த்த
நண்பர்கள் ஒன்றாய் செயல்படுவோம்!
கோட்டை ஏறி அரசும் அமைத்து
குடிநலம் பேன ஆண்டிடுவோம்!

ஊழல் அற்ற ஒரு சமுதாயம்
உழைக்கும் வர்க்கத்தால் வரவேண்டும்!
யாரும் எதையும் சாதிக்கும் - உண்மை
ஜனநாயகம் உயிர் பெற வேண்டும்!

நேர்மை

ஒரு பொது இடத்தில் சில்லறை விழும் சப்தம் கேட்க்கிறது. நம்முடையதோ என்று எடுக்கத் தோன்றுகிறது. பிறகு ஒரு கால வினாடி யோசித்து விட்டு இது என்னுடையதில்லை என்று தோன்றுகிறது. உடனே அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரிடமும் அதனைச் சுட்டிக்காட்டுகிறோம். அந்த காசு யாருடையது என்று அறிந்து அவரிடம் சென்று சேரும் படி ஏற்பாடு செய்கிறோம்.

இப்பொழுது சற்று யோசியுங்கள். அந்த ஒரு கால வினாடி தான் நமது ‘நேர்மையைய் நிர்ணயிக்கும்’ முக்கியமான நேரம். அந்த ஒரு நிமிடம் கவனமாகவும் உறுதியாகவும் இருந்துவிட்டால், நாம் இவ்வளவு காலமாகக் காத்து வந்த நம் நேர்மைக்கு நாமே உதாரணம்.

Friday, March 6, 2009

சந்தோஷம்

ஒரு பிரமாண்டமான கண்ணாடி பங்களா. அந்த பங்களாவின் சாலை ஓரமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று பங்களாவுக்குள் நுழைந்தது. உள்ளே திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்த கண்ணாடிகளில் அதன் பிம்பங்கள் தெரிய, அது தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அந்த நாய்க்கும் முன்பை விட பலமடங்கு சந்தோஷம் பெருக்கெடுத்தது.

இந்த நாய்க்குட்டி வந்து போன சிறிது நேரம் கழித்து அந்தக் கண்ணாடி பங்களாவுக்குள் கோபமான உறுமலுடன் வேறு ஒரு தெரு நாய் நுழைந்தது. தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் கோபத்துடன் முறைப்பதைக் கண்டு எரிச்சலாகி அவற்றின் மீது ஆவேசத்துடன் பாய்ந்தது. கண்ணாடிகள் உடைந்து சிதறி, அந்த நாயின் உடம்பைக் கீறி புண்ணாக்கின.

பொருள்: நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்கள் அனைத்தும் கண்ணாடி மாதிரி தான். நாம் எந்த ஒருவரையும் சந்தோஷமாக பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகத்திலும் அதே சந்தோஷம் பிரதிபலிக்கும். அப்படியல்லாமல் ஒரு வேளை கோபமுடன் ஒருவரைப் பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகமும் நமக்கு கோபமாகவே காட்சியளிக்கிறது. இதனால் அநேக சமயங்களில் நமது கோபத்தின் காரணமாக நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம். இதை தொடர்புபடுத்தி முந்தைய "தினம் ஒரு தகவலில்" நாயின் தருக்கம் என்பது பற்றியும் கூறியுள்ளோம்.

நமது சந்தோஷம், அது நமது மன அலைகளில் தான் உருவாகிறது.எனவே நம்மை நாமே எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகுவோம்!

Tuesday, March 3, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா

மன்னிப்பு

இஸ்ரேல் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட போது தனது இரண்டு குழந்தைகளையும் இழந்தால் பாலஸ்தீன பெண் ஒருத்தி. அதை தடுக்க முற்பட்ட போது தன் வயிற்றில் கருவுற்று இருந்த ஐந்து மாத குழந்தையையும் இழந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று பிறகு உடல் நலம் தேறி வெளிவந்தாள். ஒரு நாள் மாடிப் படியில் இருந்து தவறி, கீழே உருண்டு கொண்டிருந்தது ஒரு இஸ்ரேலிய குழந்தை. அப்போது தன் குழந்தையைய் கொன்ற யூத(இஸ்ரேலிய) இனத்தைச் சார்ந்த இந்த குழந்தையைய் காப்பாற்றலாமா என ஒரு கணமும் யோசிக்காமல் ஓடிச் சென்று அந்த குழந்தையைய் காப்பாற்றினால். அந்த பாலஸ்தீன பெண் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் உன் குழந்தையைய் கொன்ற இஸ்ரேலிய இனத்தைச் சார்ந்த குழந்தையைய் காப்பாற்றுகிறாயா என்று திட்டி தீர்த்தார்கள். அப்போது அந்த பெண் சொன்னாள்… “என் குழந்தையைய் கொன்ற இஸ்ரேலியர்களை நான் எப்போதோ மன்னித்துவிட்டேன்”.

“மன்னித்தல் என்பது ஒரு விசித்திரமான மருந்து. அதை அடுத்தவர்களுக்கு அளிக்கும் போது நம் மனதில் இருக்கும் காயங்கள் ஆறிவிடும்”. மன்னிப்பு பற்றி இயேசு கூறுவது… “தீமை செய்தார்க்கும் நன்மையே செய்”.

இதையே தான் வள்ளுவரும்:
இன்ன செய்தாரை ஒருத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல் - என்று கூறுகின்றார்.


Monday, March 2, 2009

நல்லோர் வழி சேர்தல்

உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள்:

முகம்நக நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு.

பொருள்: பார்க்கும் போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக, செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

நல்லோர் வழி பற்றி இலக்கணம் கூறுவது:

  • இலண்டனில் இருக்கம் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ் இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.
  • கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி புத்த பிரானைச் சந்தித்ததும் ஞான தீட்டை பெற்று விட்டாள்.
  • ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.
  • நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல் துன்பமும் இல்லை.

பழமொழி கூறுவது:

  • பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
  • பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நணபல்லார் நண்பல்லர் எட்டுணையும்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள்: பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தை தரும். அதைப் போல, மேன்மக்கள் துன்பம் வந்த போதும் தம் உயிர் குணத்திலிருந்தும் மாறுபடார். கீழோர் கலந்து பழகினாலும் நணபராகார்.

நம் வாழ்க்கைப்பாதையை தீர்மானிக்கும் மிகப்பெரிய ஒரு உறவு தான் நட்பு, ஆகவே நாம் நல்லோர் வழி நோக்கி நடந்து நலம்பெற வாழ்ந்திடுவோம்.