Friday, March 27, 2009

வரதட்சணைக்கயவர்கள்!

கோடுபோட்டு வாழ்ந்த
குடும்பத்தை
கூறு போட வந்த
கோட்டான்கள்!

கன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்
கல்வித்தகுதியையும் கேட்டு
ஆடச் சொல்லி
பாடச் சொல்லி
இன்னும் பல
நாடகம் நடத்தி
பெண்பார்க்கும் படலம்
அரங்கேறுகிறது!

மெய்ப்பொருத்தம்
இல்லையென்றாலும்
காசுக்காக -
பொய்ப்பொருத்தம்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

ஏதுமறியா
இளம் பெண்களை
கயவர்கள் -
கட்டிக் செல்கின்றனர்
அவர்களை
காலமெல்லாம்
கண்ணீர்ப் பெண்களாக்க!

பெண் பார்க்கும் படலத்தின்
அன்றைய அரங்கேற்றம்
அப்பப்பா!
கயவர்கள் -
கையில் சிக்கியபின்
எத்தனையெத்தனை
ஆர்ப்பாட்டம்!

ஜீவனுள்ள போதே
இலவசச் செலவில்
கன்னியர்க்கு
மரணத்தைக் காட்டுகின்றனர்!

மாமியார் என்ற
சர்வாதிகாரிக்கும்
கணவனென்ற
கையாலாகதவனுக்கும்
வரதட்சணையென்ற
வரிப் பணத்திற்கும்
அடிமையாகி
ஐயகோ!
கன்னியர் படும் துயரம்
கணக்கிலடங்கா!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை
அது
படுக்கையறையில் மட்டுமே!
ஐந்து நிமிடங்கள் கழிந்தால்
அந்தோ…
அவ்வுரிமையும்
பறிபோகிறது!

தூ...
மடையர்களே!
உங்களை
ஆணென்று சொல்ல -
ஆண்மையுள்ளவனென்று நினைக்க
உங்களுக்கே
வெட்கமாயில்லையா?

ஏ! கண்ணா!
இந்தக் கயவர்களையெல்லாம்
அழகே இல்லா
அரக்கிககளாய் மாற்றிவிடு!
அப்படியாவது
இவர்களுக்கு
புத்தி வரட்டும்!

ஏ! பாரதியே!
'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல
மாதவம் செய்ய வேண்டும்'
என்றீரே?
இப்போது
மாந்தராய் பிறப்பவரெல்லாம்
மாபாபம்
செய்தவரய்யா....

ஏ! இளைய சமுதாயமே!
காலத்தைப் போல்
உன்
கருத்தையும் மாற்றிக்கொள்!

வரதட்சணைத்
தணலில் வாழும்
இளங்கொடிகளுக்காக
உன்
உறுதித் தேரை
அருகே நிறுத்து!


அப்படியாவது
கன்னிக்கொடிகள்
உங்களை
பின்னி வளரட்டும்!

கலப்புத்திருமணம்
என்ற
கலப்பையால்
ஆழ உழுது
வரதட்சணைக்களை
வேறோடு
உழுது எறி!

உன் வாழ்க்கை
நீ வாழத்தான்.
இன்றே
உறுதி செய்!
நடுத்தர வர்க்கத்தை
அமைதி செய்!

தற்கொலைகள்
தடுக்கப்படும்!
சகல ஜாதியும்
ஒன்று படும்!

No comments:

Post a Comment