Tuesday, August 11, 2009

பிள்ளைகளின் அன்பு

ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"

இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.

இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.

உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்.