Thursday, January 29, 2009

வாழ்க்கை

ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் போவதைவிட, ஒரு லட்சியத்தை குறிக்கோளாகக்கொண்டு வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்.

வாழ்க்கை பற்றி கண்ணதாசன் வரிகள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடி விடாது!

மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!

வாழ்க்கையின் லட்சியம்:

நம்முடன் வாழும் சகலவற்றின் பூரண அபிவிருத்திக்கு நம்மால் இயன்ற அதிகபடி உதவிகளைச் செய்வதே நம் மனித வாழ்க்கையின் கடமையாக இருக்க வேண்டும்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

Wednesday, January 28, 2009

மனதை அறி

மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான்.

· நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், நான் எல்லாவற்றையும் விட தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான்.

· தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிர் மனது.

· மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது.

· மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே எல்லா அறங்களிலும் அடிப்படையாகும். மனக்குற்றத்தோடு செய்பவை உலகை ஏமாற்றும் ஆரவாரத்தனமே ஆகும்.

· உடம்பு களங்கப்பட்டிருக்கலாம். ஆனால் மனது கலங்கப்படாதிருக்குமானால் அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.

திருமூலர் திருமந்திரத்திலே

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமற் தானே கெடுகிறான்

தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!"

"தானே தனக்குப் பகைவனும், நண்பனும்

தானே தனக்கு மறுமையும், இம்மையும்

தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே!!"

பொய்யில்லா வாழ்க்கை

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

பொருள்: உள்ளத்தால் பொய் சொல்லாது நேர்மையாக வாழ்பவன் உலகச் சான்றோர் உள்ளத்தில் புகழ் வடிவமாக நிலைத்திருப்பான்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கும் எனின்.

பொருள்:

 • குற்றமில்லாத நன்மைமட்டும் தருமானால் பொய்கூட வாய்மையாகக் கருதப்படும்.
 • குற்றமற்ற நன்மையைய் விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தை பெற்று விடும்.
 • பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்து விடும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
 • இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றி விட முடியும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம். பொய்மை, வாய்மை ஆகிறது புரைதீர்த்த நன்மை பயக்கும் போது.

பொய்யாமை பற்றி இலக்கியங்கள் கூறுவது:

 • ஒரு பொய் பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும்,
 • ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும்,
 • ஒரு பொய் ஒரு குடும்பத்தையே பாழாகிற்று என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

பொய்யாமை பற்றி பழமொழிகள் கூறுவது:

 • பொய் சொன்னால் 'நாக்கு வெந்து போகும்'
 • பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
 • பொய் சொன்னால் வாயில் புற்று வைக்கும் என்றும் பழ மொழிகள் இன்றும் அறிவுறுத்துகின்றன.

எந்தப் பாவங்களை நீ செய்தாலும் கூட, நீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லாமல் இருப்பது.

Friday, January 23, 2009

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

பிறப்பு 05-05-1818.

தந்தை ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய் ஹென்ரிட்டா.

பிறந்த இடம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில்

உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.

மதம் யூத மதம்.

சொந்த நாடு பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள் 8 பேர்.

தந்தையைய் பற்றி சாதாரணமான வக்கிலாக இருந்து குடும்ப வருமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம் 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம் 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம் பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

கல்லூரி வாழ்க்கை பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.

கல்லூரி இறுதி வாழ்க்கை தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:

காதலியின் பெயர் ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது “உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக”

காரல் மார்க்ஸின் தோற்றம் காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

ஜென்னியின் தோற்றம் ரைன் லாந்தின் மிகச் சிறிந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.

காதல் உருவாக்கம் ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ் பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு

அகங்காரமற்ற அறிவும்

தன்னலமற்ற தியாகமமும்

பெண்களை மதிக்கும் சுபாவமுமே

ஓர் அணின் அழகு!!!

மார்க்ஸின் கூற்று ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டு மென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார்.

முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவிட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைய் பற்றியே மறக்க வைத்தது.

ஜென்னியின் காதல் “என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்தக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிர்க்கு காரணமான வரிகள்

இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும்

காதல் என்றால் ஜென்னி

ஜென்னி என்றால் காதல்….”

தொழில் பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் – ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

 1. உலகின் தலைச் சிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.
 2. உலகின் தலை சிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசால் மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிடப்பட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”!!!

நாடு மாற்றம் சீரிப்பாயும் ஏவுகணைக்கும் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும்.

“நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள் இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளிதத்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலபடுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியைய் அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”

சோதனைக் காலம் வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கி யிருந்தால் கூட உலக வரலாரே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தால் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை,

என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை

என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடிய வில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக் கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ்.

1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலக மெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டி இருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

 • உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது.
 • எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன்.
 • ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத் தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும்.
 • அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல் உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்க வில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியைய் கடவுளாக நினைத்து வணங்குகிறான்.

அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம் புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம் பிச்சைப் போடுவது.

“பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட,

மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு 1881ம் அண்டு, இறக்க மற்ற டிசம்பர் மாதத்தில் , உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியல் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்…………….”.

கடவுள் எங்கே?

அன்பு எங்கு உண்டோ அங்கு தான் கடவுள் இருக்கிறார்

ஒரு பெரியவர் தன் வீட்டின் வழியே சென்ற குளிரால் கஷ்டப்படுகிறவனை பார்த்து, உள்ளே அழைத்து அவனுக்கு கொஞ்சம் தேநீர் கொடுத்து உபசரித்தார்.

மற்றொரு நாள், தன் வீட்டின் வழியே குழந்தைக்கு ஒட்டு துணி கூட இல்லாமல் குளிரால் நடுங்கி கொண்டு சென்ற ஸ்திரி ஒருத்தியைய் அழைத்து அவளுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுத்தார்.

தனது ஆப்பிள் கூடையில் இருந்த ஒரு பழத்தை எடுத்ததற்காக, வியபாரக்காரி அந்த சிறுவனை திருடா என்று சொல்லி அவன் முடியைய் இறுக்க பிடித்துக் கொண்டு உன்னை போலீஸீல் ஒப்படைக்கப்போகிறேன். அப்போது அந்த பெரியவர் கூறியது - ஒரு ஆப்பிளைத் திருடியதற்காக சவுக்கடி கொடுப்பது என்றால் நாம் செய்த எண்ணற்ற பாவங்களுக்கு நமக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒரு நாள் அந்த பெரியவர் உட்கார்ந்து இருக்கும் போது கடவுள் அவரிடம் கூறியது,

 • நான் பசியாக இருந்தேன் நீ எனக்கு உணவு அளித்தாய்.
 • நான் தாகமாக இருந்தேன் நீ தாகம் தீர்த்தாய்
 • நான் அன்னியனாக இருந்தேன் என்னை அன்புடன் அழைத்துக் கொண்டாய்.

பொருள் - எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நாம் செய்யும் சேவையே கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான சேவையாகும்.

- நன்றி: சிந்தனையாளர் டால்ஸ்டாய்

Thursday, January 22, 2009

நாயின் தருக்கம்(Dog's Logic)

காய்ந்து போன எலும்புத் துண்டை கடிக்கின்ற நாய் எலும்புத் துண்டின் கீறல்களால் தன் உதட்டில் இருந்து வருகின்ற இரத்தம் அறியாது எலும்புத் துண்டின் சுவையே என்று நினைத்து மேலும் ஆவேசமாக கடிக்கும்.

தன்னையே அழித்துக் கொண்டு கிடைக்கின்ற தற்காலிக சந்தோஷத்துக்காக தேடி ஒடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். காய்ந்து போன எலும்பை கடித்த நாய் அடைந்த சந்தோசத்திற்கும் மது, சிகரெட் போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக் கொண்டு சிலர் அடையும் சந்தோசத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

- தொகுப்பு: சுகபோவனந்தா ஒலிநாடா.

Wednesday, January 21, 2009

கூடா நட்பு

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்: மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

தீயவர் தொடர்பால் வரும் தீமை

தீயாரைக் காண்பதும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பதுவம் தீதேஎ - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்: தீயவர்களைக் காண்பதும் அவர்கள் சொற்படி நடத்தலும் தீமையாகும் தீயவர்களின் குணங்களைப் பேசுவதும் அவர்களுடன் நட்புக் கொள்ளுதலும் தீமையாய் முடியும்.

பழமொழி: தீயவர் நட்பு தீயினும் தீமை தரும்.

சான்றோரினத்திரு

உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். (குறள் 395)

பொருள் செல்வர் முன் வறியவர் பணிந்து நிற்பது போல், கற்றவரிடம் பணிந்திருந்து கற்றவரே உயர்ந்தவர். அங்ஙனம் கல்லாதவர் கடைப்பட்டவராவர்.

விளக்கம் நல்லார் சொல் கேட்டலும்

நல்லார் வழி நடத்தலும்

நல்லார் செயல்களை திரும்ப திரும்ப நினைவு கூர்தலும்

நல்லார் ஆவதற்கு வழி விடும் என நம்புகிறேன்.

இதைத்தான் ஒளவையார் கூட இரண்டு வார்த்தையில் மிக அருமையாக சொல்லியுள்ளார். சான்றோரினத்திரு.

பொருள் - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றோருடன் கூடி வாழ வேண்டும்.

Wednesday, January 14, 2009

உண்மையான நட்பு

உண்மையான நட்பு
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.

உதாரணம்: கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையார் நட்பு.

நண்பர்கள் தங்களை ஒருவருக்கொருவர் நேரில் பார்த்திராத பொழுது கூட, அன்பின் ஒழுக்கமாய் அமைந்த நட்பானது தான் இறக்கும் தருவாயில் கூட தன்னை எனது நண்பர் கண்டிப்பாக காண வருவார் என்ற மிகுந்த நம்பிக்கை, அழமான நட்பின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Friday, January 9, 2009

ஓ நண்பர்களே!!!

ஒரு தீயவன் அல்லது கயவன் தோளில் கைப்போட்டு நெருங்கி விட்டால் ஒரு பாரதப் புதல்வன் பாழாகி விடுகிறான். இதை தான் நம் முன்னோர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

"மன்னன் எவ்வளியோ மக்கள் அவ்வளி"

"சேர்க்கை எவ்வளி செய்கை அவ்வளி"

"விழுதுக்கு இறைத்த நீர்"

இதை தான் திருவள்ளுவரும் கூட

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள் - ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

நட்பு பற்றி ஒளவையார் கூறுவது

"ஒருவனைப் பற்றி ஓர் அகத்து இரு" - நல்லவன் ஒருவனை துணையாகக் கொண்டு ஒரே இடத்தில் வாழ்.

நல்லார் தொடர்பினால் வரும் நன்மை

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லாற் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று

பொருள் - நல்லவரைக் காண்பதும், அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும். அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடி இருப்பதும் நல்லறிவம் நல்லொழுக்கமும் தரும்.

நல்லோரால் எல்லார்க்கம் நன்மை

நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்(டு)

எல்லேர்க்கும் பெய்யு மழை.

பொருள் - நெல்லுக்கு இறைத்த நீரால் புல்லும் வளம் பெறும். அது போல நல்லோரைச் சார்நத எல்லோரும் பயன் அடைவர்.