Monday, April 20, 2009

தன் கையே தனக்கு உதவி

குரு ஒரு சமயம் பனிப்பிரதேசத்தில் நடந்து செல்கையில் திடீரெனத் தடுமாறி சறுக்கி விழுந்தார். உடனே ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினார். அவரைப் பின்பற்றி வந்த சீடர் ஓடிச் சென்று, குருவின் அருகில் அவரைப் போலவே படுத்துக் கொண்டார். அதைக் கண்ட குரு சிரித்தார். மிகவும் சரி. நீ விழுந்தால் நான் கூட இப்படித்தான் செய்திருப்பேன் என்றார்.

விழத் தெரிந்தவனுக்கு எழவும் தெரியும். விழுவதற்கான சக்தியே எழுவதற்கும். விழுந்தவனை இன்னொருவன் ஒன்றும் செய்ய இயலாது. தன் கையே தனக்கு உதவி என்று அவனவனே அவனவனுக்கு துணை புரிந்து கொள்ள வேண்டும் என்பது குருவின் கருத்து. இதை அழகாக அனைவருக்கும் புரியச் செய்தார்.

நம்மால் முடியும் என்று எண்ணுங்கள்; நாயகன் துணை வருவான்!!!

Wednesday, April 15, 2009

உள்ளுணர்வு

உள்ளுணர்வு… நம்மில் பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் அறியாமலேயே செய்கிறோம். உதாரணமாக, பல் துலக்கும் பழக்கம். காலை எழுந்தவுடனேயே தன்னிச்சையாக நமது கைகள் நம்மை அறியாமலேயே குளியலறைக்குச் சென்று பல்துலக்கும் தூரிகையைய் எடுக்கிறது.இவ்வாறு உள்ளுணர்வு தன்னிச்சையாக செய்வதைப் பற்றி ஆல்டஸ் ஹட்ஸ்லி இவ்வாறு கூறுகிறார். “வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அற்பமானதிலிருந்து மிக முக்கியமானது வரை ஒன்றுக் கொன்று பொருந்தாத இரண்டு நிலைகளை இணைப்பதில்தான் திறமை அடங்கியுள்ளது”.

  • அதிக அளவு செயல், அதிக அளவு ஓய்வு.
  • ஓய்வு பெற வேண்டியது தன்முனைப்பும் உள் மனமும்.
  • செயல்பட வேண்டியது உயிருள்ள ஆத்மா.

இந்த உள்மனம் ஓய்வு பெற வேண்டியதையே ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்…”ஒரு நல்ல நாள், ஒரு நல்ல இரவுத் தூக்கத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது”. இதை நன்கு உணர்ந்தவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். இதற்காக அவர் செய்த சுயபரிசோதனை உண்ணாவிரதம், வாரம் ஒரு முறை பேசாதிருத்தல் போன்றவைகளே. நம்மை வசப்படுத்தி ஆள நமக்குத் தெரிந்தால், நம்மால் சுயபரிசோதனை செய்ய முடியும். நாம் செய்வது சரியா, தவறா என்று நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் போது செயல்கள், முடிவுகள் மற்றும் செயல் முறைகள் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிகிறது. ஓர் இலட்சிய நோக்கும் பாரபட்ச மற்ற மனமும் ஏற்படுகிறது.

“ஒரு சக்தி வாய்ந்த மனிதன் உள்ளத்தில் தோன்றும் ஒற்றை எண்ணம் தான், மாபெரும் நன்மை, தீமைகளைச் செய்கிறது. ஒற்றை எண்ணம் தான் பிரமிடைக் கட்டியது; இஸ்லாமைக் கண்டது; அலெக்சாண்டிரின் நூலகத்தை எரித்தது; தொழுநோயைய் அறவே ஒழித்தது”.

இலக்கு

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீது தாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காக புத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீது தாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரத கதை அழகாக விளக்குகிறது.

துரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒரு பறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும் கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீது மட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம் லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயே அர்ச்சுனன் ‘வில்வித்தையில் சிறந்தவர்’ என்ற பெயர் பெற்றார்.

“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.

Tuesday, April 7, 2009

மனித சிந்தனை

உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.

ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

“உண்மை அறிதல், தன்னை அறிதல்”

Monday, April 6, 2009


நேரம்

ஒரு நிமிடத்திலுள்ள அறுபது நொடிகளையும் நம்மில் பலர் முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறு வீணாகும் நொடிகள் சேர்ந்து இழந்த நிமிடங்கள் ஆகின்றன. இழந்த நிமிடங்கள் சேர்ந்து இழந்த மணிகள் ஆகின்றன. இழந்த மணிகள் இழந்த நாள்களாகவும், நாள்கள் ஆண்டுகளாகவும், ஆண்டுகள் பயனற்ற வாழ்நாளாகவும் ஆகின்றன. அத்தகைய வாழ்நாளில் செய்து முடிக்கப்படாமல் பல விஷயங்கள் நின்று விடுகின்றன.

நேரம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாத ஒன்று. யாருக்காகவும் காத்துக் கொண்டிராது. விலை மதிப்பற்ற இதனை எவ்வளவு புத்திசாலித்தனமாக நாம் பயன்படுத்துகிறோம்? வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு குளிப்பது, அழகுபடுத்திக் கொள்வது ஆகியவற்றில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கு நேரத்தை உறவினர்கள் நாண்பர்களுடன் பேசுவதில் கழிக்கிறோம். இவ்வாறு பல விதத்திலும் 70 சதவிகித நேரம் செலவழிந்து விடுகிறது. பணியாற்றுவதற்காக எஞ்சியிருப்பது 30 சதவிகிதம் தான்.இந்த‌ அருமையான‌ 30 ச‌தவீகித‌ நேர‌த்தை முழு ம‌ன‌துட‌ன் ப‌ணியாற்றிடுவோம். இந்த‌ 30 ச‌த‌வீதத்தில் நாம் அடையும் வெற்றியும் ப‌ல‌னும் தான் ந‌மது மீதியிருக்கும் 70 ச‌த‌வீத‌த்தின் ச‌ந்தோச‌த்திற்கு மூல‌த‌ன‌மாக‌ அமைய‌ப்பெரும்.

சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை!!!

நன்றி

இதோ நமது இன்றைய சிந்தனைப்பூ 'நன்றி' உங்களுக்காய் மலர்கிறது இங்கு!

'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.

'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:
‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’. அதாவது 'உன்னுடைய கர்மம் நன்மை செய்வதானால்' அதையாருக்கு வேண்டுமானாலும் செய். ‘எதை செய்ய விரும்புகிறாயோ அதை செய்து கொண்டே போ’. அதுவே சுதர்மம். நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்று கெட்டவனுக்குக்கூட செய். காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி விடுகிறது. அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.

நன்றி பற்றிய கதை ஒன்று:
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். சந்நியாசி சொன்னார்: 'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' இதுவே சுதர்மம்”.

நன்றி பற்றி ஒளவையார் கூறுவது:
'நன்றி மறவேல்', 'நன்மை கடைபிடி'.
'ஐயம் புகினும் செய்வன செய்' - பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய்.
பயன் கருதாது அறம் செய்க:
நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்வதால் அவ்வுதவியை அவன் எப்பொழுது திருப்பிச் செய்வானோ என்று ஐயுறு வேண்டுவதில்லை (அவ்வுதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும்).

நல்லோர்க்குச் செய்த உதவி:
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.
பொருள்: நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும். நல்லவர் அல்லாத அன்பில்லாத மனமுடையார்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும்(அழிந்து விடும்).

'நன்றி' பற்றி கூறுகையில் வள்ளுவப் பெருந்தகை சற்று விலகி இவ்வாறு கூறுகிறார்.
'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று நீ எல்லோருக்கும் செய்யாதே. யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்'. அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.
ஒருவன் தீமை செய்து இருந்தால் அதை மறந்து விட வேண்டும். ஆனால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது 'நன்றன்று' என்பது இவர் கருத்து.

குறள்:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் விளக்கம்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை. அந்த உதவியைய் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது!!!