Sunday, November 28, 2010

காந்தியின் வாழ்க்கை வரலாறு

29 நவம்பர் 2010

காந்தியின் வாழ்க்கை வரலாறு

1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. பன்னிரண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வழக்குகளைவிட, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம். தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது.

போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930ம் வருடம் 61 வயதான காந்தி உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டியாத்திரையை தொடங்கினார். 241மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்தியின் மன உறுதியையும் அஹிம்சையையும் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.

1947ம் வருடம் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்ததும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

120 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே தான் நினைத்திருக்கும் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற காந்திஜியை 78வது வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்து வைத்தான் கோட்ஸே என்ற கொடியவன். காந்தி மறைந்தாலும், மனஉறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, November 25, 2010

சிந்தனைகள்

26 நவம்பர் 2010

சிந்தனைகள்

  • சந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
  • உயர்ந்த சிந்தனைகள் உள்ளவர்கள் தனிமையில் இருப்பதில்லை.
  • நம்மில் நாம் திருப்த்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.
  • நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது. சந்தோஷம் மனதிலிருந்தே வருகிறது.
  • யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயல்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
  • உங்களுக்கு நீங்களே சந்தோஷமாக இருங்கள். நீங்கள் நினைப்பதைவிடக் காலம் இன்னும் குறைவாகவே இருக்கிறது.
  • நம்பிக்கையின்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியம்.

நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடாமுயற்சி, வலிமை எல்லாமே இருக்கும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, November 24, 2010

சந்தோஷம்

25 நவம்பர் 2010

சந்தோஷம்

  • அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
  • பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
  • சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
  • ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
  • ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
  • சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
  • உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, November 23, 2010

எளிமை – II

24 நவம்பர் 2010

எளிமை – II

எல்லா வசதிகளும், அனுபவிக்க வாய்ப்புகளும் ஆண்டவன் வழங்கியிருந்தபோதும், ஒன்றும் இல்லாதவனைப் போல் வாழ்வதே எளிமை. பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூக கெளரவம் இருப்பதாக, நாம் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் நமக்காக வாழ்வதே இல்லை. ஏதோவொரு வகையில் நம்மை ஊர் மெச்ச வேண்டும் என்றே விரும்புகிறோம். இதுவே அநாவசியத் தேவைகளில் நம்மை அலைக்கழிக்கிறது. தேவைகளின் பெருக்கத்தில் நிம்மதி பறிபோகிறது.

நான்கு சுவருக்குள் இருக்கும்போது நாற்பது ரூபாய் நூல் புடவையில் நிறைவு காணும் பெண் மனம், உறவுகள் சங்கமிக்கும் திருமண விழாவில் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையில்தான் பரவசம் கொள்கிறது. பிறர் பார்ப்பதற்காகத்தான் நம் அனைவருக்கும் ஆடம்பரம் அவசியப்படுகிறது. இந்த உதாரணம் எந்த ஒரு பெண்ணையும் குற்றம் அல்லது குறை கூறுவதற்காக கூறப்படவில்லை. எளிமையின் இலக்கணத்திற்காக கூறப்பட்டது.

எளிமைக்கான உதாரணங்கள்:

  • எளிமைக்கு சமூக கெளரவம் சாத்தியம் இல்லையெனில், அரை நிர்வாண காந்தியை அகிலமே தொழுததே… அது எப்படி?
  • குவித்து வைக்கும் செல்வத்தால்தான் சிறப்பு வந்து சேரும் என்றால், கூரையைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத தோழர் ஜீவாவை இன்றும் சமூகம் போற்றுகிறதே…அதன் இரகசியம் என்ன?
  • காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.
  • காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை என்ற காரணத்திற்காக, மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டினார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். கதர் மூட்டையைத் தலையிலும் இராட்டையைத் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார்.
  • எளிமையின் சின்னமாக விளங்கியவர் நேரு. ஒரு முறை காங்கிரஸ் செயற்குழு கூடியபோது இடைவெளியில் நிஜலிங்கப்பா, ‘உங்களைப் போன்ற செல்வச்சீமான்களா நாங்கள்?’ என்று சொன்னதும், ‘என் சட்டையைப் பாருங்கள். கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்? பிரதமர் சம்பளத்தில் செலவு போக மிஞ்சுவது மாதம்தோறும் ஒன்பது ரூபாய்தான்’ என்று எளிமையின் இலக்கணமாக கூறினார்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, November 22, 2010

எளிமை

23 நவம்பர் 2010

எளிமை

மகாத்மா காந்தி தனது துணிகளைத் தாமே துவைத்து சலவை செய்தார். தமக்குத் தாமே தலைமுடி வெட்டிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் நாட்டு நிலவரம் அறிய, நீண்ட பயணம் மேற்கொண்டார்.

ஒரு பித்தளைப் பாத்திரம், முரட்டுக் கம்பளியினாலான ஒரு மேற்சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு உள் சட்டை, ஒரு துப்பட்டி, தண்ணீர்ச் செம்பு அடங்கிய ஒரு சாக்குப் பையுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். நாள்காட்டித் தாள் உட்பட எந்தத் தாளையும் கிழித்தெறியாமல் குறிப்பு எழுதப் பயன்படுத்தினார்.

தேசப்பிதா பீகாரில் பயணம் செய்தபோது, அவருக்கு உதவியாக இருந்த மனுபென், காந்தி பயன்படுத்தும் பென்சில் மிகவும் சிறியதாகி விட்டதால், அதை மாற்றி ஒரு புது பென்சிலை வைத்தார். மகாத்மா நள்ளிரவில் மனுவை எழுப்பி, “எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா” என்றார். தூக்கக் கலக்கத்தில் தேடிய மனு கையில் அந்தச் சிறிய பென்சில் சிக்கவில்லை. “சரி, காலையில் தேடு. இப்போது தூங்கு” என்றார் பாபுஜி.

விடியற்காலை மூன்றரை மணிக்குப் பிரார்த்தனை முடிந்ததும் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார். அதிக நேரம் தேடி ஒரு வழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்த மனுவிடம். “கிடைத்து விட்டதா? நல்லது இப்போது தேவையில்லை. பத்திரமாக எடுத்து வை!” என்று அண்ணல் சொன்னதும் மனுவுக்கு உள்ளூரக் கோபம் வந்தது. டில்லி திரும்பியதும் இரு வாரம் கழிந்து அந்தப் பென்சிலை பாபுஜி கேட்டதும் மனு கொண்டு வந்து கொடுத்ததார். “மகளே, நீ என் சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில்கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டுத் தங்கத்துக்குச் சமம்!” என்றார் மகாத்மா.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe |Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, November 21, 2010

ஸ்டீபன் ஹாக்கிங்

22 நவம்பர் 2010

ஸ்டீபன் ஹாக்கிங்

பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழுஉற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ் எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாக செயலிழந்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘A Brief History of Time’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணிணி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித் தர சிரமம் குறைந்து. அதிகமாகச் சிந்தித்து நிறயை எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

‘காலம் எப்போது துவங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல்நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனமம் தளராமல் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

இவரது மந்திரச் சொல், “எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது”.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe |Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, November 18, 2010

வான்மீகியின் வரலாறு

19 நவம்பர் 2010

வான்மீகியின் வரலாறு

வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்த்து, “நீ ஏன் திருடுகிறாய். இது, பாவம் இல்லையா?” என்றார் நாரதர். ‘என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்’ என்றான் அவன். ‘உன் பணத்தில் பங்கு பெறுபவர்கள், நீ செய்யும் பாவத்திலும் பங்கேற்பார்களா என்று கேட்டு வா’ என்றார் நாரதர். அவன் முதலில் பெற்றோரிடம் சென்றான். ‘வழிப்பறியில்தான் நம் வாழ்க்கை நடக்கிறது. அடுத்தவர் பொருளைக் கையாடும் எனது பாவத்தில், உங்களுக்குப் பங்கில்லையா?’ என்றான். ‘பாவி மகனே, நீ செய்யும் ஈனத் தொழிலை இதுநாள் வரை நாங்கள் அறியவில்லையே. உனது பாவத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?’ என்று கோபத்தில் கத்தினர்.

வருத்தத்துடன் அவன் மனைவியிடம் சென்று நடந்ததை விளக்கினான். ‘கைப்பிடித்த பெண்ணுக்குக் காலம் முழுவதும் வாழ்வளிப்பது கணவனது கடமை. நீ தவறான வழியில் பொருள் ஈட்டினால், அந்தப் பாவத்தில் நான் எப்படிப் பங்கேற்க முடியும்?’ என்றாள் மனைவி. நாரதரிடம் திரும்பியவன், ‘இனி, நான் என்ன செய்தால் நல்லது?’ என்று வழி கேட்டான். ‘உனது பணத்தைப் பங்கு பிரித்தவர்கள், நீ செய்த பாவத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அவர்களது அன்பு சுயநலமானது. எனவே, பாவத் தொழிலை விட்டுவிடு. இறைவனை இதயத்தில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடு. உன் மனம் மாசுகளிலிருந்து விடுபடும்’ என்றார் நாரதர். அப்படியே செய்தான் திருடன்.

வருடங்கள் வளர்ந்தன. தியானத்தில் இருந்தவனைப் புற்று மூடியது. வானத்திலிருந்து ‘முனிவரே எழுந்திடும்’ என்று அசரீரி கேட்டது. ‘கள்வனாகிய நானா முனிவன்?’ என்றான் அவன். ‘தியானம் உனது மாசகற்றி, முனிவனாக மாற்றிவிட்டது. புற்றிலிருந்து எழுந்து வந்ததால் இனி நீ ‘வான்மீகி’ என்று அழைக்கப்படுவாய்’ என்றது அசரீரி. ராமாயணம் தந்த வான்மீகியின் வரலாறுதான் இது.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe |Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, November 17, 2010

பெரிதாக குறிவை

18 நவம்பர் 2010

பெரிதாக குறிவை

‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

    • வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
    • ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
    • டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, November 11, 2010

பிரார்த்தனை

11 நவம்பர் 2010

பிரார்த்தனை

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ‘ஆல்வார்’ சமஸ்தானத்து அரசரைச் சந்தித்தார். “சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டையையும் ஏன் வணங்க வேண்டும்?” என்று ஏளனக் குரலில் கேட்டார் அரசர். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல், சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம், “இது யாருடைய படம்?” என்றார். “அரசரின் படம்” என்றார் திவான். அவரிடம், “இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள்” என்றார் சுவாமி. அரசரும், திவானும் அதிர்ந்தனர்!

“இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே! எலும்பும், சதையும், ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின்மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள்? இந்தப் படத்தில், அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால், இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள்.

மக்களும் அப்படித்தான். மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர்!” என்று விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, November 9, 2010

வெற்றியின் இரகசியம்

10 நவம்பர் 2010

வெற்றியின் இரகசியம்

  • ஒரு கப்பல் கட்ட வேண்டுமா? உங்கள் ஆட்களைக் கூப்பிட்டு, மரத்தைக் கொண்டுவரச் சொல்லி, வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, உத்தரவுகள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்காதீர்கள். முடிவு இல்லாத அகண்ட கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் போதும்.
  • எல்லோரையும் நம்முடைய பயணத்தில் சேர்த்துக் கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் அடி மனத்தில் நுழைந்து பாதித்து, உங்களைவிட அவர்கள் அதிக உற்சாகமாகப் புறப்படும்படி செய்துவிட வேண்டும்.
  • மனிதர்களை கூட்டு சேர்த்துக்கொள்வது என்றால், அவர்கள் முழுக்க முழுக்க ‘இது என்னுடைய வேலை’ என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு, தொழில் இலக்குகளோ, புள்ளி விவரங்களோ போதாது. ஒரு லட்சிய வேள்வியின் பயனாக விளைவது அது.
  • கூட்டாளிகள் வந்து சேர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் மும்முனைத் திட்டம்.
    • எடுத்த காரியம் வெல்ல வேண்டும்.
    • நாம் வெல்ல வேண்டும்.
    • நம்முடன் சேர்ந்தவர்கள் வெல்ல வேண்டும்.
  • நம்முடைய லட்சியத்தால் கவரப்பட்டு, தோழர்கள் தானாக வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; நம் சுருதியில் இழைந்து பாட வேண்டும். யாரையும் வலிமையைக் காட்டி இழுக்கக் கூடாது.
  • கட்டாயப்படுத்தி கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டோமானால், எப்போது அவர்கள் நம்முதுகில் குத்துவார்கள் என்றே தெரியாது. நம் முதுகைக் காப்பாற்றுவதற்கே நேரம் சரியாகப் போய்விடும். ஆனால் பணியின் மீது முழு ஈடுபாட்டை அவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட்டால் போதும்; எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, November 8, 2010

கடவுள்

08 நவம்பர் 2010

கடவுள்

ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.