24 நவம்பர் 2010
எளிமை – II
எல்லா வசதிகளும், அனுபவிக்க வாய்ப்புகளும் ஆண்டவன் வழங்கியிருந்தபோதும், ஒன்றும் இல்லாதவனைப் போல் வாழ்வதே எளிமை. பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூக கெளரவம் இருப்பதாக, நாம் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் நமக்காக வாழ்வதே இல்லை. ஏதோவொரு வகையில் நம்மை ஊர் மெச்ச வேண்டும் என்றே விரும்புகிறோம். இதுவே அநாவசியத் தேவைகளில் நம்மை அலைக்கழிக்கிறது. தேவைகளின் பெருக்கத்தில் நிம்மதி பறிபோகிறது.
நான்கு சுவருக்குள் இருக்கும்போது நாற்பது ரூபாய் நூல் புடவையில் நிறைவு காணும் பெண் மனம், உறவுகள் சங்கமிக்கும் திருமண விழாவில் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையில்தான் பரவசம் கொள்கிறது. பிறர் பார்ப்பதற்காகத்தான் நம் அனைவருக்கும் ஆடம்பரம் அவசியப்படுகிறது. இந்த உதாரணம் எந்த ஒரு பெண்ணையும் குற்றம் அல்லது குறை கூறுவதற்காக கூறப்படவில்லை. எளிமையின் இலக்கணத்திற்காக கூறப்பட்டது.
எளிமைக்கான உதாரணங்கள்:
- எளிமைக்கு சமூக கெளரவம் சாத்தியம் இல்லையெனில், அரை நிர்வாண காந்தியை அகிலமே தொழுததே… அது எப்படி?
- குவித்து வைக்கும் செல்வத்தால்தான் சிறப்பு வந்து சேரும் என்றால், கூரையைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத தோழர் ஜீவாவை இன்றும் சமூகம் போற்றுகிறதே…அதன் இரகசியம் என்ன?
- காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.
- காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை என்ற காரணத்திற்காக, மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டினார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். கதர் மூட்டையைத் தலையிலும் இராட்டையைத் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார்.
- எளிமையின் சின்னமாக விளங்கியவர் நேரு. ஒரு முறை காங்கிரஸ் செயற்குழு கூடியபோது இடைவெளியில் நிஜலிங்கப்பா, ‘உங்களைப் போன்ற செல்வச்சீமான்களா நாங்கள்?’ என்று சொன்னதும், ‘என் சட்டையைப் பாருங்கள். கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்? பிரதமர் சம்பளத்தில் செலவு போக மிஞ்சுவது மாதம்தோறும் ஒன்பது ரூபாய்தான்’ என்று எளிமையின் இலக்கணமாக கூறினார்.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment