23 நவம்பர் 2010
எளிமை
மகாத்மா காந்தி தனது துணிகளைத் தாமே துவைத்து சலவை செய்தார். தமக்குத் தாமே தலைமுடி வெட்டிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் நாட்டு நிலவரம் அறிய, நீண்ட பயணம் மேற்கொண்டார்.
ஒரு பித்தளைப் பாத்திரம், முரட்டுக் கம்பளியினாலான ஒரு மேற்சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு உள் சட்டை, ஒரு துப்பட்டி, தண்ணீர்ச் செம்பு அடங்கிய ஒரு சாக்குப் பையுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். நாள்காட்டித் தாள் உட்பட எந்தத் தாளையும் கிழித்தெறியாமல் குறிப்பு எழுதப் பயன்படுத்தினார்.
தேசப்பிதா பீகாரில் பயணம் செய்தபோது, அவருக்கு உதவியாக இருந்த மனுபென், காந்தி பயன்படுத்தும் பென்சில் மிகவும் சிறியதாகி விட்டதால், அதை மாற்றி ஒரு புது பென்சிலை வைத்தார். மகாத்மா நள்ளிரவில் மனுவை எழுப்பி, “எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா” என்றார். தூக்கக் கலக்கத்தில் தேடிய மனு கையில் அந்தச் சிறிய பென்சில் சிக்கவில்லை. “சரி, காலையில் தேடு. இப்போது தூங்கு” என்றார் பாபுஜி.
விடியற்காலை மூன்றரை மணிக்குப் பிரார்த்தனை முடிந்ததும் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார். அதிக நேரம் தேடி ஒரு வழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்த மனுவிடம். “கிடைத்து விட்டதா? நல்லது இப்போது தேவையில்லை. பத்திரமாக எடுத்து வை!” என்று அண்ணல் சொன்னதும் மனுவுக்கு உள்ளூரக் கோபம் வந்தது. டில்லி திரும்பியதும் இரு வாரம் கழிந்து அந்தப் பென்சிலை பாபுஜி கேட்டதும் மனு கொண்டு வந்து கொடுத்ததார். “மகளே, நீ என் சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில்கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டுத் தங்கத்துக்குச் சமம்!” என்றார் மகாத்மா.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe |Unsubscribe|Donate for this Service.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment