29 நவம்பர் 2010
காந்தியின் வாழ்க்கை வரலாறு
1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. பன்னிரண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வழக்குகளைவிட, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம். தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது.
போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.
1930ம் வருடம் 61 வயதான காந்தி உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டியாத்திரையை தொடங்கினார். 241மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்தியின் மன உறுதியையும் அஹிம்சையையும் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947ம் வருடம் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்ததும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.
120 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே தான் நினைத்திருக்கும் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற காந்திஜியை 78வது வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்து வைத்தான் கோட்ஸே என்ற கொடியவன். காந்தி மறைந்தாலும், மனஉறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
gandhi thatha good man
ReplyDelete