Tuesday, December 21, 2010

கனவில் தொடங்கிய பயணம்

22 டிசம்பர் 2010

கனவில் தொடங்கிய பயணம்

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். ‘இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

நம்மில் பலபேர் இந்த வயதில் “ஓய்வு பெற்று விட்டேன்” என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? “நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்”. நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ‘இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்’.

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. ‘நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்’!

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்; ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு ‘இன்னம் கொஞ்சம் ஓடு!’ என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

அரவிந்தின் ‘பேராசை’ அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்’ என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது ‘அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்’ என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. ‘யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்’.

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

  • 24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
  • 2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.
  • உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.
  • அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.
  • தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.
  • இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.
  • இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.
  • ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment