Thursday, May 7, 2009

பதற்றம்

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!

No comments:

Post a Comment