Thursday, May 7, 2009

பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.

“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.

ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.

No comments:

Post a Comment