Sunday, January 2, 2011

இல்லறம்

03 ஜனவரி 2011

இல்லறம்

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Compan

Wednesday, December 29, 2010

கர்மயோகம்

30 டிசம்பர் 2010

கர்மயோகம்

ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. ‘வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலையைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்… அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங்கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி அழுதது.

இதைக் கேட்ட ஞானி, “காலணியே! நீ கர்மயோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்துவிட்டு எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன்மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருதிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு-அவமதிப்பு, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்மயோகம்” என்றார்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, December 28, 2010

பற்றற்ற பற்று

29 டிசம்பர் 2010

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, December 27, 2010

பற்றற்ற நிலை

27 டிசம்பர் 2010

பற்றற்ற நிலை

பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். “சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?” என்று கேட்டார் பரமஹம்சர். “ஒரு தடையும் இல்லை!” என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரேடியாக ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற்குக்கூட முடிவதில்லை.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, December 26, 2010

எளிமை

27 டிசம்பர் 2010

எளிமை

ஜனகர் ஒரு நாள் விலையுயர்ந்த ஆடை-அணிகலன்களுடன் அறுசுவை விருந்துண்டு, உடலை வருத்தாத மெல்லிய மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது அவருக்கு ஒரு கனவு!

பகையரசனிடம் நாட்டைப் பறிகொடுத்து, கந்தலாடையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் பசியால் வாடித் தவிப்பதாகக் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்தவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கனவு, தன்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்டதே என்று கவலை கொண்டார். ‘உண்மையில் நான் அரசனா? அல்லது பிச்சைக்காரனா?’ என்ற ஐயம் அவருள் எழுந்தது. ஆத்மஞானம் அவரது கண்களைத் திறந்தது. அரசன், பிச்சைக்காரன் என்ற இரண்டு அபிமானங்களும் ஒழிந்து பேதமற்ற நிலையை அவர் பெற்றார்.

ஜனகரைப் போல் அனைவரும் ஆதல் எளிதன்று.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, December 23, 2010

தியானம்

23 டிசம்பர் 2010

தியானம்

ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’ என்று கேட்டான். ‘என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும்’ என்றார் ஜென். அவனும் சம்மதித்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. இதில் மனம் சலித்த சீடன், ‘எப்போது நான் தியானம் கற்பது?’ என்றான். ‘நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை’ என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.

நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. ‘நல்லதையே நாடு’ என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி?

நாம் ஒன்று செய்வோம். காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம்.

நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Compa

Wednesday, December 22, 2010

சிந்தனைகள்

23 டிசம்பர் 2010

சிந்தனைகள்

· நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாக நீ ஆகிவிடுவாய்.

· அற்ப இதயமுடைய மனிதரிடமிருந்து எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனஉறுதி உன்னிடத்தில் இருக்க வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருந்தாக வேண்டும்.

· ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழியாகும்.

· மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இருந்தால் பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

· உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுள்ள, சில மனிதரின் வரலாறே ஆகும். உள்ளே மறைந்து இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொணரும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு.