Sunday, November 7, 2010

புதுமைக்குத் தேவை சவால்

08 நவம்பர் 2010

புதுமைக்குத் தேவை சவால்

நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!

டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார். அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.

இந்த ஒரு சவால் மட்டுமே - ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள். விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல “சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.

போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும், சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல; இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!

சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, November 4, 2010

ஆணவம்

04 நவம்பர் 2010

ஆணவம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார்.

“நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?” என்று பெருமிதத்துடன் கேட்டார் யோகி.

அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். “அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித் யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண்டாத இ்ந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!” என்றார்.

நாம் எந்தச் செயலை செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்கிறார் கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, November 2, 2010

தொழிலில் வெற்றி

3 நவம்பர் 2010

தொழிலில் வெற்றி

சமீபத்தில் திருச்சியைச் சார்ந்த எமது வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் இரண்டு முறை தொழில் தொடங்கியதாகவும் அந்த இரண்டிலும் தோற்று போனதாகவும் தெரிவித்திருந்தார். நண்பருக்காகவும் மற்றும் அவரைப் போன்ற வளரும் இளம் தொழில் அதிபர்களுக்காகவும் இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • வெறுமே யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள்; வெறுமே ஆசைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்; உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக இருந்தால், களத்தில் குதித்து அதைச் செய்யுங்கள்.
  • ஒரு முறை உள்ளே இறங்கிவிட்டால், அதன் அடி ஆழம் வரை புகுந்து புறப்படுங்கள்; அதை விட்டு வெளியேறுவதை ஒரு வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காதீர்கள்.
  • நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் முயற்சி தோற்றால், தோற்றது உங்கள் ஐடியாதானே தவிர, நீங்கள் அல்ல!!! (தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்).
  • பெரிய நிறுவனங்கள் பெரிய மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. தனி மனிதன் தனியொரு ஆளாகச் சாதிக்க முடிவது மிகக் குறைவே!
  • சரியான குழுவை ஒன்றிணையுங்கள் (அளவுக்கதிகமான திறமைகள், மதிப்புகளைவிட, கோட்பாடுகளும் அணுகுமுறையும்தான் முக்கியம்).
  • திட்டங்களை தீட்டுங்கள்; ஆனால், சந்தையில் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, எல்லா வாய்ப்புகளுக்குமே தயாராக இருங்கள்.
  • பெரிதாக நினையுங்கள்; உங்களுடைய உயர்வை ஏற்கனவே அடைந்திருந்தால் எப்படி நடந்துகொள்வீர்களோ, அப்படி நடந்துகொள்ளுங்கள்.
  • வேலையையும் வாழ்க்கையையும் சமமாக வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, November 1, 2010

ராக்ஃபெல்லர் – II

02 நவம்பர் 2010

ராக்ஃபெல்லர் – II

தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் '‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.

“கோடிக் கோடியாகப் பணம் குவித்து விட்டீர்கள் இப்போது சந்தோஷம்தானா?” என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “சந்தோசம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது!” என்றார்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, October 31, 2010

ராக்பெல்லர்

1 நவம்பர் 2010

ராக்பெல்லர்

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்

நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.

முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, October 28, 2010

தன்னம்பிக்கை

29 அக்டோபர் 2010

தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.

“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.

இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.

சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.

“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, October 26, 2010

ஆசை


27
அக்டோபர் 2010

ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே

பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்

சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”

----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

-- நன்றி உமா சங்கர்

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company