Monday, May 11, 2009

அன்னையர் தினம் மே 11, திங்கள் 2009

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும். உங்களுக்காக "அன்னையர் தினம்" பற்றிய கட்டுரையைய் இங்கு சமர்ப்பிக்கிறேன்.

தாய்:தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.

· தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.
· தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.
· தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.
· தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.
· தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.
· தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.
· தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.
· தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.


தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
· தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).
· விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.
· தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.
· தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.
· ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.

· அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
· அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.
· தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.
· மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.
· சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.
· காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

· இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

· திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.

தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:
· நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

· என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.

தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:
· அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.

· பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.

திருக்குறள் கூறுவது:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.
விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.


"தாயிற் சிறந்ததொரு கோவிலும்இல்லை!!!"


Friday, May 8, 2009

செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

Thursday, May 7, 2009

அறம் செய்க

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.

அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…

  • ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.
  • மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).
  • சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)

“இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.

“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.

உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.

சுயநலம்

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல..

உதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது!!!

குணம்

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.

துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.

துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

குறள்:

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!

பதற்றம்

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!

பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.

“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.

ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.